இசை அமைப்பாளர், காமெடியனுக்கு கோடி, லட்சத்தில் சம்பளம் வேஸ்ட்!!!

Sunday, March 25, 2012
இசை அமைப்பாளர், காமெடி நடிகர்களுக்கு கோடி, பல லட்சங்களில் சம்பளம் தருவது வேஸ்ட் என்றார் இயக்குனர் விக்ரமன்.
புதுமுகங்கள் ஸ்ரீதரன், ஜெயசேகர், வெண்ணிலா, என்.பி.ராஜ சேகரன் உடையார் உள்ளிட்டோர் நடிக்கும் படம் ‘அமிர்தயோகம்Õ. இதன் பாடல் கேசட்டை இயக்குனர் விக்ரமன் வெளியிட இயக்குனர் திருமலை பெற்றார். பிறகு விக்ரமன் பேசியதாவது:

என் படங்களுக்கு நானேதான் நகைச்சுவையும் எழுதுவேன். ஷூட்டிங் நேரத்தில் யாரும் சிரிக்க மாட்டார்கள். தியேட்டரில் வரவேற்பு இருக்கும். அதிகபட்சமாக காமெடி நடிகருக்கு 1 லட்சம்தான் தந்திருக்கிறேன். காமெடி காட்சிக்கு கவுண்டமணியை நடிக்க கேட்டால் 40 லட்சம் ரூபாய கேட்பார். அந்த பணத்தில் முக்கால்பாகம் படத்தை முடித்துவிடுவேன். இளையராஜாவை இசை அமைப்பாளராக போட்டால் அவரது பேருக்காக 10 லட்சம் ரூபாய் கூடுதல் வியாபாரம் இருக்கும். அவர் வாங்கும் சம்பளத்தைவிட யாருக்கும் அதிகமாக தருவது எனக்கு உடன்பாடில்லை. எதற்காக இசைக்காக மட்டும் ஒன்றைகோடி ரூபாய் தர வேண்டும். என் படம் ஒன்றுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்தார். அதில் பிரபல கவிஞரை பாடல் எழுத அணுகினேன். திருத்தங்கள் சொன்னபோது கோபப்பட்டார். நான் சிறப்பு தமிழ் படித்திருக்கிறேன். எனக்கும் இலக்கணம் தெரியும். முட்டாள் இல்லை. உடனே அந்த கவிஞரை வேண்டாம் என்று பழனிபாரதி போன்ற புதிய கவிஞர்களுக்கு வாய்ப்பளித்தேன். ஒருவர் வாய்ப்பை மறுக்கும்போது இன்னொருவர் புதிதாக உருவாகிறார். ஒரு படத்துக்கு ராஜா மறுத்ததால்தான் ரகுமான் உருவானார். ரஜினி நடித்த ‘அண்ணாமலை‘ படத்தை இயக்க மாட்டேன் என்று வசந்த் சொன்னதால்தான் சுரேஷ் கிருஷ்ணா உருவானார்.இவ்வாறு விக்ரமன் கூறினார்.இயக்குனர் ஏ.மாணிக்கராஜ் வரவேற்றார்.

Comments