அமெரிக்க விழாவில் கலந்து கொள்ள வடிவேலு ரூ 25 லட்சம் கேட்டதால் ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சி!!!

Monday, March 12, 2012
அமெரிக்காவில் நடக்கவிருக்கும் தமிழ்ச் சங்க விழாவில் கலந்து கொள்ள நடிகர் வடிவேலு ரூ 25 லட்சம் கேட்டதால், விழா ஏற்பாட்டாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி திரும்பிவிட்டார்களாம்.

கடந்த தேர்தலில் திமுகவை ஆதரித்து வடிவேலு பேசிய பேச்சு, அவரை இப்போது ஒரேயடியாக உட்கார வைத்துவிட்டது.

சினி வாய்ப்புகள் குறைந்தன. நில ஆக்கிரமிப்புகள் சர்ச்சைகள், வழக்குகள், மன உளைச்சல் என காமெடி நடிகரின் வாழ்க்கை சோகமாகிப் போனது.

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் ஒரு விழாவில் பேசும் போது வடிவேலுவை மிகச் சிறந்த காமெடி நடிகர் என்றும் அவரை திரையுலகினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இதற்கிடையில் அமெரிக்காவில் தமிழ்ச் சங்கம் நடத்தும் விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு வடிவேலுக்கு அழைப்பு வந்தது.

சினிமாவில் அவர் பிசியாக இருந்த போதும் இது போன்ற அழைப்புகள் வந்தன. ஆனால் அவர் போகவில்லை. தற்போது கைவசம் படங்கள் இல்லாததால் தமிழ் சங்க விழாவுக்கு வர வடிவேலு ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து விழா ஏற்பாடுகளை அமெரிக்க தமிழர்கள் தடபுடலாக செய்து வந்தனர். ஆனால் திடீரென்று அமெரிக்க தமிழ் சங்க விழாவில் பங்கேற்க தனக்கு ரூ.25 லட்சம் தர வேண்டும் என்று வடிவேலு நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழ் சங்கத்தினர் ஷாக்காகி விட்டார்களாம்.

இதுகுறித்து அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யும் ஒருவர் கூறுகையில், "வடிவேலு ரூ.25 லட்சம் கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு பணத்தை கொடுத்து வடிவேலுவை விழாவுக்கு அழைத்து வர யாருக்கும் விருப்பமோ அவசியமோ இல்லை. எனவே வடிவேலு இல்லாமலேயே விழாவை நடத்த முடிவு செய்துவிட்டோம்," என்றார்.

இதுகுறித்து விவரமறிய வடிவேலுவைத் தொடர்புகொண்ட போது, 'அப்புறமா பேசுங்க, அண்ணன் பிஸியா இருக்காரு' என்ற பதில்தான் வந்தது!!

Comments