அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அதனாலதான் சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்யலே-வடிவேலு!!!

Sunday, February 26, 2012
மதுரை::எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிச்சு சிகிச்சை பண்ணிடிருக்கோம். அதனால்தான் என்னால சங்கரன்கோவில்ல பிரசாரம் பண்ண முடியவில்லை. மத்தபடி, நான் யாருக்கும் பயந்து ஒளிந்து ஓடவில்லை, ஓடவும் மாட்டேன். காலமும், நேரமும் வருகிறபோது மக்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார் வைகைப் புயல் வடிவேலு.

விஜயகாந்த்துடன் கடும் மோதலில் இருந்து வந்த வடிவேலு, கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவில் இணைந்து விஜயகாந்த்தை மிகக் கடுமையாக விமர்சித்துப் பிரசாரம் செய்தார். ஆனால் அவரது நேரமோ, என்னவோ, தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்தது, அதிமுகவுடன் சேர்ந்த தயவால், எதிர்க்கட்சியாக உயர்ந்தது தேமுதிக, விஜயகாந்த்தோ எதிர்க்கட்சித் தலைவராகி விட்டார்.

இதனால் வடிவேலு நிலைமை சிக்கலாகிப் போனது. அவரை வைத்துப் படம் பண்ண யாரும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வடிவேலுவின் நகைச்சுவையை மக்கள் ரசிக்கும் வாய்ப்பை திரையுலகம் மறுத்து வருகிறது. வடிவேலு இல்லாத தமிழ் சினிமா, புளியே இல்லாத புளிச்சாதம் போல இருக்கிறது.

இந்த நிலையில், வடிவேலு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், வடிவேலுவுக்கு அரசியல் எல்லாம் தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். ஓட்டுப்போடும் அத்தனை பேரும் அரசியல்வாதிகள்தான். ஓட்டுப்போடும் மக்களில் நானும் ஒருவன் என்பதால் நானும் அரசியல்வாதிதான்.

என் தாய் சரோஜினி, உடல் நலக்குறைவு காரணமாக மதுரை ஐராவத நல்லூரில் மருத்துவமனையில் உள்ளார். அதனால் என்னால் சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியவில்லை.

தேர்தலில் போட் டியிடுவீர்களா என்று என்னை கேட்கிறார்கள். காலமும், சூழ்நிலையும் நிர்ப்பந்நதிக்கும் போது மக்களை சந்திப்பேன். நான் யாருக்கும் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளமாட்டேன்.

தீவிர அரசியலில் குதிப்பேன். அரசியலுக்கு நான் வரக்கூடாது என்று சொல்வது அபத்தம். நிச்சயமாக அரசியலுக்கு வந்தே தீருவேன். என்னை யாரும் தடுக்க முடியாது.

திரையுலகம் என்னை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டதாக சொல்கிறார்கள். விரைவில் நான் கதாநாயகனாக நடிக்கும் புதுப்பட அறிவிப்பு வெளிவரும் என்றார் வடிவேலு.

Comments