சூர்யாவின் மாற்றான் தாய் நான்!!!

Tuesday, February 14, 2012
2012லிருந்து ரிவர்ஸ் கியர் போட்டு 84க்கு போனால், டீக்கடைகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது ‘சோலைப் புஷ்பங்களே... என் சோகம் சொல்லுங்களேன்...’ பாடல்! ‘இங்கேயும் ஒரு கங்கை’ படத்தில் மறக்கமுடியாத விஷயம் இந்தப் பாடல் மட்டுமல்ல... காதலுக்காக முரளியை மருகவைத்த நடிகை தாராவும்தான்! ‘நாயகன்’, ‘பறவைகள் பலவிதம்’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்ததுடன் கன்னடத் திரையுலகிற்குச் சென்றவர், 18 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளார், ‘மாற்றான்’ படத்தில் சூர்யாவின் அம்மாவாக!

இடையில் நிறைய இயக்குனர்கள் என்னை அழைத்தார்கள். கன்னடத்தில் பிஸியாக இருந்ததால், தேடி வந்த வாய்ப்புகளை இழந்தேன். இடையில் ‘எம் மகன்’ படத்தில் நடிக்க வந்தேன். இரண்டு நாள் ஷூட்டிங் முடிந்தநிலையில் வடிவேலுவின் கால்ஷீட்டில் குளறுபடி ஏற்படவே, தொடர்ந்து அதில் நடிக்க முடியவில்லை. 18 வருடங்களுக்குப் பிறகு இப்போது தமிழ்ப் படத்தில் நடிப்பதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. சென்னையில் இருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன’’ என்று சிரிக்கிற தாரா தமிழில் ஏழு படங்கள் முடித்த கையோடு பெங்களூரு சென்றவர்.

2005ல் கிரீஷ் காசரவல்லி இயக்கத்தில் நான் நடித்த ‘ஹசினா’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. நிறைய ஸ்டேட் அவார்டும் வாங்கி இருக்கேன். நான் நடித்த 12 படங்கள் தேசிய விருது வாங்கியிருக்கு. அந்த பாக்கியம் அமைந்தது என் பெற்றோர் செய்த புண்ணியம்தான். தேசிய விருது வாங்கிய அதே வருடத்தில்தான் கன்னட சினிமாவில் சிறந்த ஒளிப்பதிவாளராக போற்றப்படும் எச்.சி.வேணுவுடன் திருமணமானது. பொதுவா திருமணம் ஆகிவிட்டால் வீட்டோடு முடங்க வேண்டிய சூழ்நிலைதான் நிறைய நடிகைகளுக்கு இருக்கு. அந்த விஷயத்தில் நான் ரொம்ப லக்கி. குடும்ப வாழ்க்கை, சினிமா, அரசியல்னு எப்பவும் பிஸியாவும் சந்தோஷமாவும் இருக்கேன்’’ என்று வார்த்தைகளில் நிறைவைக் கொட்டுகிறார் தாரா.

மாற்றான்’ பற்றிக் கேட்டதும் அவர் கண்களில் பரவசம். ‘‘கே.வி.ஆனந்த் சாரோட ‘அயன்’ படத்திலேயே நான் நடிச்சிருக்க வேண்டியது. கால்ஷீட் பிரச்னையால முடியாமப் போனது. ‘மாற்றான்’ பற்றி சொன்னப்போ, ‘இந்த முறை கண்டிப்பா மிஸ் பண்ணக்கூடாது’ன்னு தயாராகிட்டேன். சூர்யாவோட அம்மாவா நடிக்கிறேன். சும்மா வந்துபோகிற அம்மா கேரக்டர் இல்லை. ஒரு கண்ணில் கண்ணீரும் மறு கண்ணில் சென்டிமென்ட்டும் பிழிந்து கிளிசரின் செலவு வைக்கும் வேலையெல்லாம் இல்லாமல் படம் முழுக்க வரும் கனமான கதாபாத்திரம். முதல் கட்ட ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்து சென்னையில்தான் ஷூட்டிங்.

அந்த கேரக்டர் பற்றி வெளில சொல்லக்கூடாது. இயக்குனரோட கோபத்திற்கு நான் ஆளாக விரும்பல. இரண்டு சூர்யாவுக்கு நான் அம்மா... இளமை, முதுமை என இரண்டு பருவங்களும் இருக்கு. நான் நடித்த படங்களில் இதுவும் முக்கியமான படமாக இருக்கும். சூர்யாவின் தந்தையாக சச்சின் கேரேக்கர் நடித்திருக்கார். அவருக்கு ரொம்ப கண்டிப்பான தந்தை கேரக்டர் என்றால், அதுக்கு நேரெதிரா கலாட்டா அம்மா சுதாவா நான் வர்றேன். இதுக்கு மேல என்னால சொல்ல முடியாது ப்ளீஸ்...’’ என்கிற தாரா, வாயைத் திறந்தால் சூர்யா புகழ் பாடுகிறார்.

சூர்யா ரொம்ப அர்ப்பணிப்பான நடிகர். புது ஹீரோக்களே ஷூட்டிங்கிற்கு பத்து பேரோட வந்து பந்தா காட்டும் இந்தக் காலத்தில் சூர்யா ரொம்பவே சைலன்ட். பிரேக் டைம்ல ஒரு ஓரமா உட்கார்ந்து அடுத்த ஷாட்டில் எப்படியெல்லாம் பண்ணலாம்னு யோசிப்பார். 4 மணிக்கு ஷூட்டிங் முடிச்சிட்டு, மறுபடியும் 7 மணிக்கு கூப்பிட்டாலும் அலுப்பு பார்க்காமல் வரக்கூடியவர். இதுவரை நான் சேர்ந்து நடித்த நடிகர்களில், தனது கேரியர் பற்றி ரொம்ப கவனமா இருக்குற ஆளா சூர்யாவைத்தான் பார்க்கிறேன். ஷூட்டிங் முடிஞ்சபிறகும் என்னை ‘சுதா அம்மா’ன்னே கூப்பிடுறார்.

சினிமாவைத் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் சக மனிதர்களை நேசிக்கற மனிதரா இருக்கிறார். இது மாதிரியான மனிதர்கள் அபூர்வம். இப்போ இந்த பேட்டிக்காக நீங்க படம் கேட்டப்பதான், அவர்கூட சேர்ந்து ஒரு போட்டோகூட எடுத்துக்கலையேன்னு ஞாபகம் வருது. சென்னையில் ஷூட்டிங் நடக்குறப்போ சூர்யாவோட கண்டிப்பா போட்டோ எடுத்துக்கணும்!’’

Comments