ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆசை: நடிகர் அனுப் பேட்டி!!!

Wednesday,February,29,2012
ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆசை என்று நடிகர் அனுப் கூறினார்.ஊமைவிழிகள் படத்தின் மூலம் தமிழகத்தை மிரட்டிய ஆபாவாணனின் உதவியாளரும், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவருமான கமல் முதன் முறையாக என்டர்டெய்ன்மென்ட் அன்லிமிடெட் சார்பில் மறுமுகம் என்ற படத்தை இயக்குகிறார். டேனியல் பாலாஜி​ அனுப் (சிக்கு புக்கு) இணைந்து நடிக்கிறார்கள். மும்பையைச் சேர்ந்த ரன்யா கதாநாயகியாக நடிக்கிறார். மூன்று கட்டமாகத் திட்டமிடப்பட்டிருந்த மறுமுகம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் கொடைக்கானலிலும் நடந்து முடிந்திருக்கிறது.
ஒரு காதல் சைக்கோவாக மிரட்டியிருக்கிறார் டேனியல் பாலாஜி. இன்னொரு கதாநாயகன் அனுப்பினை காதலிக்கும் ரன்யாவை டேனியல் பாலாஜியும் துரத்த ஒரு விறு விறுப்பான காதல் திரில்லராக இந்தப் படத்தினை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கமல். மிகவும் சிறப்பான கதைகள் கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் டேனியல் பாலாஜிக்கு மறுமுகம் நிச்சயம் மேலும் ஒரு மணிமகுடமாக இருக்கும். தமிழ் ரசிகர்கள் பார்க்காத டேனியல் பாலாஜியின் இன்னொரு முகத்தைக்காட்டும் படமாக மறுமுகம் இருக்கும் என்கிறார் இயக்குனர் கமல்.
வட்டாரம், சிக்குபுக்கு ஆகிய படங்களில் ஆர்யாவுடனும் கத்திக்கப்பல் படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கும் அனுப் இந்தப் படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். குறுகிய காலத்தில் நான்காவது படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சென்னை வைஷ்ணவா கல்லூரி பட்டதாரியான அனுப் நடனப்பள்ளியில் ஜெயந்தி மாஸ்டரிடம் 8 ஆண்டுகாலம் நடனம் படித்தவர். இவரது தந்தையார் தெலுங்குப் படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர். சினிமாச் சூழலில் வளர்ந்த அனுப் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வர வேண்டும் என்று தனது சிறுவயதிலேயே முடிவு செய்திருக்கிறார்.
பெற்றோர்களின் முழு ஆதரவும் அவருக்குக் கிடைக்க மளமளவென்று நான்கு படங்கள். தொடர்ந்து வெகுளியான கதாபாத்திரங்களிலேயே நடித்து வருகிறீர்களே என்று கேட்டதற்கு ஆக்ஷன் படங்களில் நடிப்பதற்குத் தமக்கும் ஆசை இருப்பதாகவும் இருந்தாலும் இதற்கு முன் அவ்வாறு நடித்த படங்களில் கதை தம்மை மிகவும் கவர்ந்ததால் அவ்வாறு நடிக்கவேண்டியதாயிற்று என்றும் மறுமுகம் படத்தில் சிறிது மாறுபட்டு யுவதிகளைக் கவரும் வகையில் ஒரு லவ்வர் பாய் ( ) ஆக, காதல்காட்சிகளில் துறுதுறுவென்று நடித்திருப்பதாகவும் கூறினார். மறுமுகம் படத்தின் பாடல்காட்சி கொடைக்கானல் மலைப் பகுதியில் படம்பிடிக்கப்பட்டது. அனுப் மிகவும் சறுக்கலான பாறைகளைக் கொண்ட அந்த மலையின் உச்சியிலிருந்து கீழே நிற்கும் கதாநாயகியை நோக்கி ஓடிவர வேண்டும் கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் துணிச்சலுடன் நடித்திருக்கிறார். டேனியல் பாலாஜிக்கும் இவருக்கும் படப்பிடின் போது நிறைய கருத்து வேறுபாடுகள் வந்திருந்த போதிலும் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகு இருவரும் நெருங்கிய நண்பர்கள் தாம் சொல்கிறார் தயாரிப்பாளர் சஞ்சய். கதாநாயகி ரன்யாவைப் பற்றிக் கூறும் போது, அவர் மும்பையைச் சொந்த ஊராகக் கொண்டாலும் தமிழ் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சென்னையிலேயே தங்கி நடிப்புப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருந்த ரன்யாவிற்கு மறுமுகம் ஒரு ஜாக்பாட் ஆக அமைந்திருக்கிறது.
அவருக்கு தமிழ் நன்றாகப் புரியும் ஆதலால் இந்தப் படத்தில் இயக்குனர் கமலின் திரைக்கதையினை நன்கு உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றார். திரைப்படக்கல்லூரி மாணவரான கனகராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் மலேசியாவில் வெளிவந்த 12 என்ற தமிழ்ப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கமல் திரைக்கதை எழுதி வெளிவந்த 12 மலேசியா நாட்டின் சிறந்த படத்திற்கான விருதினை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபல தெலுங்கு இசையமைப்பாளரான அகஸ்தியா முதன்முறையாக மறுமுகம் படம் மூலம் தமிழில் இசையமைக்க வருகிறார்.
படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் ஏக்நாத். யாசின் மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த மஞ்சு நடனங்கள் அமைக்க, பிரபல சண்டைப் பயிற்சியாளர் பிரகாஷின் புதுமையான சண்டைக்காட்சிகளுடன் உருவாகிக் கொண்டிருக்கும் மறுமுகம் அணியினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்குத் தயாராகி வருகினறனர். பானு சந்தர், உமா பத்மநாபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார் சஞ்சய். சினிமா மீது கொண்ட காதலால் தாமும் ஒரு அதில் ஒரு சிறந்த தயாரிப்பாளராக வர வேண்டும் என்கிற லட்சியத்தில் தனது முதல் படமாக மறுமுகம் படத்தினைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் சஞ்சய்.

Comments