Wednesday,February 22,2012சென்னை::மத்திய அரசு கொண்டு வரவுள்ள சினிமா சேவை வரியை ரத்து செய்யக் கோரி, நாளை அகில இந்திய அளவில் சினிமா ஸ்டிரைக் நடக்கிறது. இதை தமிழ் திரையுலகினர் இணைந்து அறிவித்துள்ளனர். இது தொடர்பான அவசர கூட்டம், சென்னை பிலிம் சேம்பரில் நேற்று மாலை நடந்தது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இந்திய திரைப்பட சம்மேளன துணை தலைவர் எல்.சுரேஷ், பெப்சி செயலாளர் ஜி.சிவா, இயக்குனர் சங்க செயலாளர் அமீர், தியேட்டர் உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் சரத்குமார் கூறியதாவது:
இன்றைய நிலையில், லாபம் ஈட்ட முடியாத தொழிலாக சினிமா மாறியிருக்கிறது. மேலும் ஒரு சுமையாக, மத்திய அரசு சேவை வரியை கொண்டு வர உள்ளது. ஏற்கனவே 10.3 சதவீதமாக இருக்கும் வரி, புதிதாக கொண்டு வர உள்ள சட்டத்தால், 30 சதவீதமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், திரையுலகம் பாதுகாப்பாற்ற சூழ்நிலைக்கு தள்ளப்படும். எனவே, சேவை வரியை ரத்து செய்ய கோரி, 23ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வோம்.
இந்திய அளவில் சினிமா ஸ்டிரைக் நடக்க உள்ளதால், அந்தந்த மாநிலத்தை சேர்ந்த சினிமா அமைப்பினர் அவரவர் இடத்தில் வேலை நிறுத்தம் செய்வார்கள். சென்னை பிலிம் சேம்பரில் 23ம் தேதி காலை முதல் மாலை வரை பொதுக்கூட்டம் நடக்கிறது. நாளை ஒருநாள் இந்திய அளவில் சினிமா தியேட்டர்கள், படப்பிடிப்புகள் உட்பட எதுவும் நடைபெறாது.
Comments
Post a Comment