பிரபல நடிகர்களின் படங்கள் உள்பட 50 படங்கள் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது:சூர்யா படத்துக்கு பர்மிஷன் புதுமுகம் படத்துக்கு தடையா?

Tuesday, February 21, 2012
சூர்யா நடிக்கும் மாற்றான் ஷூட்டிங் நடக்கிறது. புதுமுகம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது என்று ‘கோழி கூவுது’ பட குழுவினர் புகார் கூறினர். பெப்சி, தயாரிப்பாளர்கள் இடையேயான சம்பள பிரச்னையால் தமிழ் திரையுலகில் சுமார் 1 மாதமாக ஷூட்டிங் பணிகள் முடங்கி இருக்கிறது. பிரபல நடிகர்களின் படங்கள் உள்பட 50 படங்கள் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கே.வி.ஆனந்த் இயக்க சூர்யா, காஜல் அகர்வால் நடிக்கும் ‘மாற்றான்’ பட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இது பல இயக்குனர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி பட யூனிட்டில் விசாரித்தபோது, ‘‘ஐதராபாத் பிலிம்சிட்டியில் ஷூட்டிங் நடத்தும்போது அங்குள்ள செட் மற்றும் கருவிகளை பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தம் இருக்கிறது.

அதன்படிதான் இந்த ஷூட்டிங் நடக்கிறது. ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள எந்த டெக்னிஷியனையும் இந்த ஷூட்டிங்கில் நாங்கள் பயன்படுத்தவில்லை என்றனர். கடந்தவாரம் அஜீத்குமார் நடிக்கும் ‘பில்லா 2’ ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்தபோது தொழிலாளர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து அதன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அசோக், ஸ்ரீஜா, ஜோதிலட்சுமி, ரோகிணி ஆகியோர் நடிக்கும் ‘கோழி கூவுது’ என்ற படத்தின் ஷூட்டிங்கை காரைக்குடியில் நடத்த இயக்குனர் ரஞ்சித், தயாரிப்பாளர் நாகராஜன் திட்டமிட்டனர். நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களும் நேற்று முன்தினம் காரைக்குடி புறப்பட்டு சென்றனர்.

திடீரென்று ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. இதுபற்றி பட குழு கூறும்போது,‘‘ திரையுலகில் ஸ்டிரைக் நடப்பதால் ஷூட்டிங் தொடங்கக்கூடாது, அரசு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை முடிந்து அறிவிப்பு வந்தபிறகு ஷூட்டிங் நடத்துங்கள் என்று சங்க நிர்வாகிகள் சிலர் கூறினர்.இதனால் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு ஊருக்கு திரும்பிவிட்டோம்’’ என்றனர். தொழிலாளர் ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் பெப்சி, தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை இன்று மீண்டும் நடக்கிறது.

Comments