படங்களை வெளியிட கட்டுப்பாடு தயாரிப்பாளர் சங்கம் முடிவு!

Wednesday,January,11,2012 12
திரைப்படங்களை வெளியிடுவதில் புதிய கட்டுப்பாடுகளை தயாரிப்பாளர் சங்கம் கொண்டு வந்துள்ளது. இதுபற்றி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது: இப்போது சிறு பட்ஜெட் படங்கள் அதிகளவில் தயாரிக்கப்படுவதால், பெரிய பட்ஜெட் படங்களை, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, மே 1, ஆகஸ்ட் 15, தீபாவளி ஆகிய நாட்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும். மற்ற நாட்களில் சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சினிமா தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து, கேயார், ஹென்றி உட்பட 15 பேர் அடங்கிய குழு நியமித்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. சுமூகமான முடிவு ஏற்படும்வரை, எந்த தயாரிப்பாளரும் இப்போதுள்ள சம்பளம் தவிர உயர்த்தி கொடுக்கக் கூடாது. ‘தானே’ புயல் நிவாரண நிதியாக, தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 25 லட்ச ரூபாய் முதல்வரிடம் வழங்கப்பட உள்ளது. மேலும், படத் தயாரிப்பு செலவுகளைக் குறைக்க சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் உடனே முன்வர வேண்டும். 10 லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் கலைஞர்கள், அவர்களாகவே சம்பளத்தைக் குறைத்துக்கொண்டால், தயாரிப்பு செலவு குறையும். ஷூட்டிங் நாட்களையும் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார். துணைத் தலைவர்கள் சத்யஜோதி தியாகராஜன், டி.சிவா, செயலாளர்கள் கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன், பொருளாளர் கலைப்புலி எஸ்.தாணு உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments