இனி என் பெயரில் விருது வழங்க வேண்டாம்! - ரஜினி திடீர் அறிவிப்பு!!!

சாதனையாளர்களுக்கு என் பெயரில் இனி விருதுகள் வழங்க வேண்டாம். நான் ஒன்றும் சாதித்துவிடவில்லை. இனி என் குருநாதர் கே பாலச்சந்தர் பெயரில் அந்த விருதினை வழங்க வேண்டும்," என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்தார்.

லதா ரஜினியின் ஆஷ்ரம் ஆர்ட்ஸ் அகாடமியின் 21-வது ஆண்டுவிழா மற்றும் கலைத்துறை சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.

லதா ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்று, கலைத்துறை சாதனையாளர்களுக்கு ரஜினி விருது, சிவாஜி விருது மற்றும் பீஷ்மா விருதுகளை வழங்கினார்.

மறைந்த நடிகர் ஷம்மி கபூர், பழம்பெரும் பாலிவுட் நடிகை ஆஷா பரேக், இயக்குநர் கே பாலச்சந்தர் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்களுக்கான 'ரஜினிகாந்த் விருது'களை வழங்கி கவுரவித்தார் ரஜினி.

பின்னர் அவர் பேசுகையில், "விழாவின் கடைசியில் நான் வந்தால் போதும் என்றார்கள். அதனால்தான் இந்த மேடையில் நிற்கிறேன்.

இங்கே விருது பெற்றவர்களைப் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆஷா பரேக் அவர்கள் மும்பையிலிருந்து வந்திருக்கிறார். மறைந்த ஷம்மி கபூரின் மகன் ஆதித்யா இந்த விருதைப்பெற நேரில் வந்திருக்கிறார்.

ஷம்மி கபூர் மிக ஸ்டைலிஷான நடிகர். சின்ன வயதிலிருந்தே எனக்குப் பிடித்தமானவர். என்னுடன் ஒருநாள் அவர் காபி ஷாப்பில் பேசிக்கொண்டிருந்ததை மறக்க முடியாது.

இங்கே வாழ்நாள் சாதனையாளர்களுக்கு எனது பெயரில் விருதுகள் வழங்கப்பட்டன. நான் ஒரு சாதனையாளனே அல்ல. என்னுடைய குருநாதர் கே பி சாருக்கு எனது பெயரில் விருது வழங்கியது சங்கடமாக உள்ளது. இதை நான் என் மனைவி லதாவிடமும் கூறிவிட்டேன். இனி வரும் ஆண்டுகளில் எனது பெயரில் இந்த விருதினை வழங்க வேண்டாம். கே பாலச்சந்தர் பெயரில் வழங்கப்பட வேண்டும்," என்றார்.

Comments