எஸ்.பி.பி.க்கு முதல் பரிசு வழங்கக் கோரி சண்டை போட்ட ஜானகி! சுவாரஸ்யமான பின்னணி கதை!

எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று சொல்கிறோம். அந்த எஸ்.பி.பி-யின் முழு பெயர் என்ன தெரியுமா? ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம்.இன்று ஜூன் 4ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும், சங்கீத உலகின் அத்தியாயம் பற்றியும், அவரது சுவாரஸ்ய பக்கங்கள் பற்றியும் தொகுத்து வழங்குகின்றோம்.தனது 20வது வயதில் 1966ஆம் ஆண்டு ஒரு தெலுகுத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாலசுப்ரமணியம் பாடத் தொடங்கினார்.
 
பாடகர் மட்டுமல்லாது திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் என பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்L பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் வழங்கியது.
தமிழில் முதலில் பாடியது ‘சாந்தி நிலையம்’ படத்தில் வரும் ‘இயற்கையெனும் இளையகன்னி’ என்ற பாடலாகும். ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த ‘அடிமைப் பெண்’ திரைப்படத்தில் பாடிய ‘ஆயிரம் நிலவே வா’ வெளிவந்தது.நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார் எஸ்.பி.பி.
 
முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் ‘சங்கராபரணம்’ திரைப்படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார்.இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்கும் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார்.
 
எஸ்.பி.பி.க்கு முதல் பரிசு வழங்கக்கோரி சண்டை போட்ட பின்னணி பாடகி ஜானகி
பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியன் ஒரு தேசிய ஒற்றுமை சின்னம். ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் பாடிய பெருமை அவருக்கு உண்டு. இன்று எஸ்.பி.பி. என்றும் பாலு என்றும் செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் மனிதரின் வாழ்க்கை போராட்டங்கள் நமக்கு தெரியாது.எஸ்.பி.பியின் இளம் வயதில் மெல்லிசை பாடல் போட்டி ஒன்றில் பாட எஸ்.பி.பி.க்கு தெரியாமலேயே அவருடைய நண்பர் ஒருவர் விளையாட்டாகப் பெயர் கொடுக்க எஸ்.பி.பி. அந்தப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக பாடினார்.
 
ஆனால் பரிசு கிடைக்கவில்லை. ஆனாலும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. கோதண்டபாணி என்ற இசையமைப்பாளர் அந்த போட்டியின் போது இருந்தார்.எஸ். பி. பி.யிடம் ‘உனக்கு நல்ல குரல்வளம் இருக்கிறது. உன்னை சினிமாவில் பாட சேர்த்து விடுகிறேன்’ என்று உற்சாகமூட்டி பாலுவை பல சினிமா இசையமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்றார்.

எப்படி முதல் பாட்டு போட்டியில் எஸ்.பி.பி.க்கு பரிசு கிடைக்கவில்லையோ, அதே போல் முதல் சினிமா முயற்சியும் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை.
எஸ்.பி.பி யும் அவரை அழைத்து சென்ற கோதண்டபாணியும் மனம் தளரவில்லை. அவர்களின் முயற்சி வெற்றியடைய பல நாட்கள் ஆயின. ஆனால் பல நாட்கள் காத்திருந்து, பலமான அஸ்திவாரத்தோடு எழுப்பப்பட்ட இசை மாளிகைதான் எஸ். பி. பி. யின் பாடல்கள்.
தனக்கு முதன்முதலில் வாய்ப்பிற்காக அழைத்து சென்ற இசையமைப்பாளரை இன்று வரையிலும் எஸ். பி. பி. மறக்கவில்லை.
 
20 ஆண்டுகளுக்கு பிறகு தான் உருவாக்கிய ரிக்கார்டிங் தியேட்டருக்கு ‘கோதண்டபாணி ஆடியோ ரிக்கார்டிங் தியேட்டர்’ என்று குருவின் பெயரையே சூட்டி தன் நன்றிக் கடனைச் செலுத்தினார்.
முதல் போட்டியில் பரிசு கிடைக்காதது பெரிய தோல்வி என்றால் அதைவிட சுவையான நிகழ்ச்சியையும் பாலு சந்தித்திருக்கிறார்.
 
ஒரு தெலுகு சங்கத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பரிசு வாங்கி கொண்டிருந்தார் எஸ். பி. பி.. மூன்றாவது ஆண்டும் வெற்றி பெற்றால் பாலுவிற்கு ஒரு பெரிய வெள்ளிக் கோப்பை ஒன்று பரிசாக கிடைக்கும்.
 
இந்நிலையில் மூன்றாவது ஆண்டு போட்டியில் சங்கத்தின் பொறுப்பாளர்களில் சிலர் எஸ். பி. பி.யை இரண்டாவது பரிசுக்கு தள்ளி விட்டார்கள். நீதிபதிகளின் முடிவை பாலு மனமார ஏற்றார்.
போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு ஒரு பிரபலமான பின்னணி பாடகி தலைமை தாங்கினார். பாடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாட மேடைக்கு அழைக்க, முதல் பரிசு பெற்ற இளைஞர் போட்டியில் பாடிய அதே பாடலை பாடிச் செல்ல, இரண்டாவது பரிசு பெற்ற எஸ்.பி.பி. தன் பாடலைப் பாடி முடித்தார்.
 
பரிசளிக்க வந்த பாடகியின் முகத்தில் ஏக கோபம். அவரே மைக் முன்னால் வந்து ‘இன்று இரண்டாவது பரிசு வாங்கியிருக்கும் இளைஞன், முதல் பரிசு வாங்கியிருக்கும் இளைஞனை விட மிக நன்றாகப் பாடியுள்ளான். ஆகையால் போட்டியின் முடிவுகளை ஏற்க என் மனம் சம்மதிக்கவில்லை’ என்று கூறி எஸ்.பி.பி. க்கு முதல் பரிசையும் அந்த வெள்ளிக் கோப்பையையும் வாங்கி தந்தார்.
திரையுலகத்தின் ஒரு பிரபலமான பாடகியால், சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அங்கீகாரம் பெற்றவர் எஸ். பி. பி. பிற்காலத்தில் அன்று பரிசளித்த பாடகியுடனேயே பல பாடல்களைப் பாடியிருக்கின்றார் எஸ். பி. பி.
 
இன்றும் அந்தப் பாடகியின் மீது மட்டற்ற மரியாதை வைத்திருக்கிறார். சண்டை போட்டு எஸ். பி. பி.க்கு பரிசு வாங்கிக் கொடுத்த அந்தப் பாடகி யார் தெரியுமா?பாலுவின் திறைமைக்காக போராடி முதல் பரிசை வாங்கி தந்த அந்த பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி தான். அன்றிலிருந்து இன்றுவரை சகோதரி திருமதி எஸ். ஜானகியை பெரிதும் மதித்து வருகிறார் பாலு.

Comments