பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் உடல்நலகுறைவால் காலமானார்!


பிரபல இந்தி நடிகர் ரிஷி கபூர் உடல்நலகுறைவால் மும்பையில் காலமானார். 67 வயதான நடிகர் ரிஷி கபூர், 1970ல் தனது தந்தை ராஜ் கபூருடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1973-ல் வெளியான ' பாபி' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் ரிஷிகபூர் நடித்தவர். தனது, நடிப்பில் ரசிகர்களை ஈர்த்த ரிஷி கபூருக்கு Mera Naam Joker திரைப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது.
 
இதற்கிடையே, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் ரிஷி கபூர், சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு தங்கியிருந்து 11 மாதங்களுக்கு மேல் சிகிச்சை பெற்றுவிட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடு  திரும்பினார். இதன் பின்னர் ஜூஹி சாவ்லாவுடன் இணைந்து 'Sharmaji Namkeen' என்ற படத்தில் நடித்து வந்தார். பின்னர் உடல்நிலை ஒத்துழைக்காததால் அப்படத்தின் ஷீட்டிங் ரத்து செய்யப்பட்டது.
 
இந்நிலையில் நேற்று காலை நடிகர் ரிஷி கபூரின் உடல்நிலையில் தொய்வு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள ஹச்.என்.ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று  காலாமானார்.  இத்தகவலை நடிகரும் அவரது சகோதரருமான ரந்தீர் கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மறைந்த நடிகர் ரிஷி கபூருக்கு நீது கபூர் என்ற மனைவியும் ரன்பீர் கபூர் என்ற மகனும் உள்ளனர்.
 
நடிகர் ரிஷி கபூர் மறைவிற்கு பாலிவுட் நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  பாலிவுட் நடிகர் இர்பான் கான் நேற்று உயிரிழந்த நிலையில், தற்போது ரிஷி கபூர் உயிரிழந்துள்ளார். அடுத்தடுத்து 2 நடிகர்கள் உயிரிழந்ததால் பாலிவுட் நடிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்...
 
மறைந்த நடிகர் ரிஷி கபூருக்கு சினிமா புதிதல்ல. தாத்தா, அப்பா தொடங்கி இவர்களின் குடும்பமே கலை குடும்பத்தை சார்ந்தது என்பதால் இவர்களின் குடும்பத்தை கபூர் குடும்பம் என்றே அழைப்பார்கள். ரிஷி கபூரின் குடும்பமே கலைக் குடும்பம். இவரது தாத்தா பிரித்வி ராஜ் கபூர், முகல்-ஏ-ஆசம் என்ற படத்தில் அக்பர் கதாபாத்திரத்தில் நடித்தவர். இவரது தந்தை ராஜ் கபூர். 50 - 60களில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக கொடிக் கட்டி பறந்தவர். இவரது சித்தப்பாக்கள் ஷமி கபூர். இவரும் 60களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். இன்னொரு சித்தப்பாவான சசி கபூரும் 60களில் முன்னணி நாயகராக வலம் வந்தவர். இவரது சகோதரர் ரன்தீர் கபூர் அவரும் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தார். 
 
எம்ஜிஆர் நடித்த ரிக்ஷாக்காரன் படத்தை ஹிந்தியில் ரிக்ஷாவாலா என்ற பெயரில் நடித்தார். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுதவிர ஜவானி திவானியும் இவர் நடித்த மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாகும்.
 
1970ல் இவரது தந்தை ராஜ்கபூர், தனது சொந்த தயாரிப்பான ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து, நடித்த மேரே நாம் ஜோக்கர் என்ற படத்தில் சிறு வயது ராஜகபூர் வேடத்தை ரிஷி கபூர் நடித்து முதன்முதலாக சினிமாவில் நுழைந்தார். இவர் முதன் முதலாக நாயகனாக அறிமுகமான பாபி படமும் இவரது தந்தை தயாரிப்பான ஆர்.கே. தயாரிப்பில் வெளிவந்தது தான். முதல்படமே பிளாக்பஸ்டர் படமாக ரிஷி கபூருக்கு அமைந்தது.
 
இதனைத் தொடர்ந்து கேல் கேல் மேன், ரப்பூ சக்கர், அமர் அக்பர் ஆண்டனி, சாந்தினி, லைலா மஜ்னு, போல் ராதா போல், ரங்கீலா ரத்தன், பாரூத், ஹம் ஹிசிசே கம் நகீன், சர்கம், சாகர், நகினா, தீவானா உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார். 'ஆ அப் லவ்டு சலேன்' என்ற படத்தை இயக்கி உள்ளார். ஒருக்கட்டத்தில் ஹீரோவில் இருந்து விலகி குணச்சித்ர நடிகராக மாறி அசத்தினார் ரிஷி கபூர். கடைசியாக 2019ம் ஆண்டு தி பாடி என்ற படத்தில் நடித்தார்.
 
பாலிவுட்டில் பெரும்பாலும் இவர் காதல் தொடர்பான படங்களிலேயே நடித்து ரொமான்ட்டிக் நாயகனாக வலம் வந்தார். மேலும் பாலிவுட்டில் இவரை செல்லமாக 'சிண்ட்டூ ஜி' என்றே அழைப்பார்கள். ஒரு படத்தில் 'சிண்ட்டூ ஜி' ரிஷி கபூராகவே நடித்துள்ளார்.
 'கேல் கேல் மேன்' படத்தில் தன்னுடைய ஜோடியாக நடித்த நடிகை நீத்து சிங்கை 1980ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரன்பீர் கபூர், ரித்திமா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் ரன்பீர் இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இவரது அண்ணன் மகள்கான கரீனா கபூர், கரீஷ்மா கபூர் இருவரும் பாலிவுட்டில் முன்னணி நாயகிகளாக வலம் வந்தவர்கள். ரிஷி கபூர் நடிப்பில் வெளியான படங்களில் பல பாடல்கள் வெற்றி பெற்று இருந்தாலும, தமிழ் ரசிகர்களும் மிக பிடித்தமான பல பாடல்களில் ஒரு சிலவற்றை இங்கு கொடுத்துள்ளோம்.
பாடல்கள் படம்
01. மே சாயர் தோ நகின் - பாபி
02. முஜ்ஜே குச் கெக்னா ஹே - பாபி
03. ஜூட் பொலே கவ்வா காதே - பாபி
04. ஹம் தும் ஏக் கம்ரே மே பந்து ஹோ - பாபி
05. பச்னா ஏ ஹசினோ - ஹம் ஹிசிசே கம் நகீன்
06. மில் கயா கம் கோ சாத்தி - ஹம் ஹிசிசே கம் நகீன்
07. ஹம்கோ தோ யாரா தேறி யாரி - ஹம் ஹிசிசே கம் நகீன்
08. ஹம் கிசே சே கம் நகீம் - ஹம் ஹிசிசே கம் நகீன்
09. தர் தே தில் - கர்ஷ்
10. ஹம்னே தும்னே தேக்கா - கேல் கேல் மெயின்
11. ஏக் மே அவுர் ஏக் து - கேல் கேல் மெயின்
12. சாந்தினி ஓ மேரி சாந்தினி - சாந்தினி
13. சாகன் கினாரே - சாகர்
14. அமர் அக்பர் ஆண்டனி - அமர் அக்பர் ஆண்டனி
15. பர்தா ஹே பர்தா - அமர் அக்பர் ஆண்டனி
16. சோச்சேங்கே தும்மே பியார் - தீவானா
17. தேரே தர்த் சே தில் - தீவானா
18. தேரி இஸி அதா பே சனம் - தீவானா
19. கோயல் போலி துனியா டோலி - சர்கம்
20. பர்பத் கே உஸ் பார் - சர்கம்
21. டப்லிவாலே டப்லி பஜா - சர்கம்
22. போல் ராதா போல் - போல் ராதா போல்
23. தீவானா தில் - போல் ராதா போல்
24. கிசி பே தில் அகர் ஆ ஜோ தோ - ரப்பூ சக்கர்
25. தும் கோ மேரே தில் மே - ரப்பூ சக்கர்

Comments