கொரோனா சமயத்தில் டிபியை வெளியிட்டோ, கொண்டாட்டத்திலோ ஈடுபட வேண்டாம் - அஜித் வேண்டுகோள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்திற்கு மே 1ம் தேதி 49வது பிறந்தநாள். பொதுவாக அவரின் பிறந்தநாளை ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடுவார்கள். சமூகவலைதளங்கள் வந்த பின்பு, அதிலும் அன்றைக்கு அஜித் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான் டிரெண்டிங்கில் இருக்கும். சமீபகாலமாக சமூகவலைதளங்களில் நடிகர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்க பொதுவான டிபி ஒன்றை ரசிகர்கள் உருவாக்கி டிரெண்ட் செய்கின்றனர்.
 
இந்தாண்டு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுவான டிபி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை அருண் விஜய், ஹன்சிகா, பிரேம்ஜி அமரன், ஆதவ் கண்ணதாசன், பிரியா ஆனந்த், இசையமைப்பாளர் தமன், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட 14 சினிமா பிரபலங்கள் இதை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் கொரோனா சமயத்தில் இது போன்று செய்யாதீர்கள் என அஜித் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக நடிகர் ஆதவ் கண்ணதாசன் டுவிட்டரில், அன்பார்ந்த ரசிகர்களே. அஜித் எனக்கு போன் செய்தார். கொரோனாவால் மக்கள் அவதிப்பட்டு வரும் இந்த சூழலில் என் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் இது போன்று டிபியை வெளியிட்டோ, கொண்டாட்டத்திலோ ஈடுபட வேண்டாம் என தன்னிடம் சொன்னதாக கூறியுள்ளார்.
 
இங்கே ரசிகர்களுக்கு ஒரு டவுட் வரலாம். எதற்காக ஆதவ் கண்ணதாசனிடம் அஜித் சொல்ல வேண்டும் என்று. பொதுவாக உருவாக்கப்பட்ட டிபி வெளியிடும் சினிமா பிரபலங்களில் இவரும் ஒருவர். அதனால் தான் அவருக்கு போன் செய்தார் என்கிறார்கள்.

Comments