சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ஏப்ரல் மாத இறுதியில் திரைக்கு வர தயாராகி வந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகிவிட்டது.இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் படத்தை திரையரங்க ரிலீஸுக்கு முன்பே நேரடியாக ஆன்லைன் OTT தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஒரு முன்னணி OTT நிறுவனம் இதன் உரிமையை ரூ.9 கோடி கொடுத்து கைப்பற்றி இருப்பதாகவும் இதன் மூலம் தயாரிப்பு தரப்பு லாபம் பார்த்துவிட்டதாகவும் கூறுகின்றனர்.
ஏற்கனவே கொரோனா பீதியில் உள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கு சூர்யாவின் இந்த முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 1000 திரையரங்குகளும் அதை சார்ந்துள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருப்பதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.மேலும் தன்னுடைய கோரிக்கையை ஏற்காமல் பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஆன்லைனில் வெளியிடும் பட்சத்தில் இனி சூர்யா தயாரிக்கும் படங்களையோ அவரை சார்ந்தவர்கள் தயாரிக்கும் படங்களையோ திரையரங்குகளில் திரையிட மாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஒரு படம் மட்டுமல்லாது யோகி பாபுவின் காக்டெயில், த்ரிஷாவின் பரமபத விளையாட்டு, அரவிந்த் சாமியின் நரகாசூரன் என அடுத்தடுத்து பல படங்கள் நேரடியாக ஆன்லைனில் வெளியாக தயாராகி வருகின்றன. காலத்திற்கேற்றாற்போல் திரைத்துறை நவீனமடைவது வரவேற்கத்ததுதான் என்றாலும், தற்போதைய சூழலில் தயாரிப்பாளர்கள் இதுபோன்று முடிவெடுப்பது திரைத்துறையின் ஆரோக்கியத்தை கெடுக்கும் என்கின்றனர் ரசிகர்கள்.
Comments
Post a Comment