Kadaram Kondan Press Meet Photos!.‘கே.கே’ விக்ரமான ‘சியான்’ விக்ரம்!

இனி சியான் விக்ரமை கே.கே விக்ரம் என்றே அழைப்பார்கள் என கமல்ஹாசன் கடாரம் கொண்டான் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.ராஜ்கமல் இண்டர்நேஷனல் - ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இவ்வருட பொங்கலன்று வெளியான இதன் டீசர் ரசிகர்களைக் கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் மிகப்பிரம்மாண்டமாக நேற்று (ஜூலை 3) நடைபெற்றது. இவ்விழாவில் கமல்ஹாசன், விக்ரம், ராஜேஷ் M.செல்வா, அக்‌ஷரா ஹாசன், அபி மற்றும் படத்தில் பணிபுரிந்த பல கலைஞர்கள் பங்கேற்றனர்.
 
 
கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக இருந்து தூங்காவனம் படத்தின் மூலம் அறிமுக இயக்குநர் ஆனவர் ராஜேஷ் M.செல்வா. தனது இரண்டாவது படம் குறித்து பேசிய அவர், "ராஜ்கமல் பிலிம்ல இரண்டு படம் மட்டும் அல்ல. நிறைய படங்களில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன். படம் நல்லா வந்திடும்னு தெரியும். ஆனாலும் ஒரு பயம் இருந்தது. விக்ரம் சார் இங்கு எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் செட்டிலும் இருப்பார். அவருடன் வொர்க் பண்ணும் போது என் நண்பர்கள் எல்லோரிடமும் கேட்டேன். அவருக்குப் பிடித்து விட்டால் நம்மை குழந்தை மாதிரிப் பார்த்துக்கொள்வார் என்றார்கள். சொன்னது போலவே என்னை குழந்தை போலவே பார்த்துக்கொண்டார். ஏன் இந்தப்படத்தில் அக்‌ஷரா நடிக்கிறார் என்று பலரும் கேட்டார்கள். இதற்கான பதில் படம் பார்த்தால் தெரியும். கமல் சாருக்கு மறுபடியும் நன்றி. ஏன் என்றால் என் வீட்டில் என்னை நம்புகிறதை விட கமல் சார் என்னை நம்புகிறார்" என்றார்.
 
நடிகர் விக்ரம் பேசியதாவது,"இந்தப்படத்தில் அபி இன்னொரு ஹீரோ. ரொம்ப இண்டர்ஸ்ட்ரிங்கான கேரக்டர் பண்ணியிருக்கார். அக்‌ஷரா ஹாசன் ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கிறார். படத்தை ரீ ரிக்கார்டிங்கோட பார்க்கும் போது சூப்பரா இருந்தது. இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையா வொர்க் பண்ணி இருக்கார். இயக்குநர் ராஜேஷ் சார் இந்தப்படத்தில் இன்னொரு நடிகர். எல்லாரும் நான் துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷாக இருப்பேன் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்தப்படத்தில் ரொம்ப ஸ்டைலாக இருப்பேன். இந்தப்படம் நிச்சயம் எனக்குப் புதிய ரசிகர்களைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்" என்றார்.
 
படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன் பேசியதாவது,"என்னோட முயற்சிகள் எல்லாமே எனக்குப் பின்னாலும் தொடரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். கமல்ஹாசனை அழைத்துச் செல்லும் ஊபர் வாகனம் அல்ல இந்தக்(ராஜ்கமல்) கம்பெனி. நல்ல சினிமாவை கொண்டு வர வேண்டும் என்றுதான் துவங்கியுள்ளோம். கடாரம் கொண்டான் படத்தை நான் பார்த்தேன். படத்தை மிகவும் என்ஜாய் பண்ணிப் பார்த்தேன். ஒரு படத்திற்கு எல்லாமே அமையாது. ராஜ்கமலின் கடாரம் கொண்டான் படத்திற்கு அது அமைந்தது சந்தோஷம். இனி சியான் விக்ரமை கே.கே விக்ரம் என்று அழைப்பார்கள். நிச்சயமாக இந்தப்படம் இன்னொரு நகர்வுக்கு அழைத்துச் செல்லும்”.
 
கடாரம் கொண்டான் டிரெய்லர்
 
மலேசியாவில் தங்கள் முதல் குழந்தைக்காக காத்திருக்கும் புது மணத் தம்பதிகளாக தோன்றும் அபி-அக்‌ஷராவின் மென்மையான பகுதி அடுத்தடுத்த பரபரப்புகளால் தடம் மாறுகிறது. அண்டர் கவர் ஏஜெண்டாகயிருந்து கமாண்டோவாக மாறிய விக்ரமின் ஸ்டைலிஷான தோற்றம் ரசிக்க வைக்கிறது. நீங்க விளையாண்டது என்கிட்ட இல்ல, எமன்கிட்ட’ என்றபடி விக்ரம் பேசும் வசனம் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுவது நிச்சயம்.ஜிப்ரான் இசையமைத்திருக்கும் படத்திற்கு ஸ்ரீ நிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜூலை 19ஆம் தேதி கடாரம் கொண்டான் திரைக்குவரவிருக்கிறது.

Comments