ஹாரரை அடையாளமாக்கிய தமன்னா!

முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்த தமன்னா, கதாநாயகியை மையமாகக் கொண்ட ஹாரர் படங்களில் நடிக்க முன்னுரிமை அளித்து வருகிறார்.தமன்னா நடிப்பில் இந்த ஆண்டு கண்ணே கலைமானே, தேவி 2 ஆகிய படங்கள் தமிழில் வெளியாகியுள்ளன. தெலுங்கில் எஃப் 2 - ஃபன் அண்ட் ஃப்ரஸ்ட்ரேஷன், இந்தியில் காமோஷி என்ற படமும் வெளியாகியுள்ளன. இவற்றில் தேவி 2, காமோஷி ஆகிய படங்கள் ஹாரர் ஜானரைச் சார்ந்தவை. அதனைத் தொடர்ந்து ஓம்கார் இயக்கத்தில் ராஜு காரி கதா 3 என்ற ஹாரர் காமெடி படத்தில் ஒப்பந்தமான தமன்னா சில காரணங்களால் படத்திலிருந்து விலகியுள்ளார்.
 
இந்த நிலையில் தமன்னா அடுத்து நடிக்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் இயக்கும் ‘பெட்ரொமாக்ஸ்’ படத்தில் தமன்னா பிரதான பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் வெற்றி பெற்ற அனந்தோ பிரம்மா படத்தின் ரீமேக்காக உருவாகிறது இப்படம். தாப்ஸி நடித்த பாத்திரத்தில் தமன்னா தமிழில் நடிக்கவுள்ளார்.
ஹாரர் படங்களின் மூலம் அதிக ரசிகர்களை ஈர்க்கலாம், பெரும்பாலும் அவை கதாநாயகியையே மையமிட்டும் வருகின்றன போன்ற காரணங்களால் தமன்னா தொடர்ந்து ஹாரரில் கவனம் செலுத்தி வருகிறார் எனக் கூறப்படுகிறது. பெட்ரொமாக்ஸ் திரைப்படமும் கதாநாயகியை மையப்படுத்திய ஹாரர் மூவி தான்.
 
இந்தப் படத்தில் யோகி பாபு, முனிஷ்காந்த், பக்ஸ், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். அச்சம் என்பது மடமையடா படத்திற்கு ஒளிப்பதிவு செய்த டேனி ரெய்மண்ட் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். லியோ ஜான்பால் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். விக்ரம் வேதா படத்திற்கு கலை இயக்கப் பணிகளை மேற்கொண்ட வினோத் ராஜ்குமாரும் படக்குழுவில் இணைந்துள்ளார். பேஷன் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

Comments