’நான் இன்னும் சினிமாவில் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் எனக்கு ‘சேது’,’பிதாமகன்’ஆகிய படங்களைக் கொடுத்த பாலாதான்’என்று ஒரு மிகச்சிறிய இடைவெளிக்குப் பிறகு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசினார் நடிகர் விக்ரம்.கமல் தயாரிப்பில் விக்ரம்-அக்ஷரா ஹாசன் நடித்துள்ள படம் ‘கடாரம் கொண்டான்’.இப்படம் தெலுங்கில் ‘மிஸ்டர் கே கே’ என்ற பெயரில் இன்று வெளியாகிறது.இதையொட்டி ஐதராபாத்தில் நடந்த விழாவில் விக்ரம், அக்ஷராஹாசன் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய விக்ரம் ,’
எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாதவர் பாலா. சேது படத்தைக் கொடுத்து சிறந்த நடிகனாக மாற்றினார். பிதாமகன் மூலம் இன்னொரு வெற்றியையும் கொடுத்தார். அதில் பேசாமலேயே நடித்து இருந்தேன். அதுபோல் என்னைப் பார்த்து பாலாவே ஆச்ச
ரியப்படும்படி செய்தவர் இயக்குநர் ஷங்கர். அந்நியன் படத்தை பாலா வெகுவாக பாராட்டினார்.சேதுவில் நடித்தபோது மெலிய வேண்டும் என்றனர். அதற்காக ஒரு சப்பாத்தி, ஒரு அவித்த முட்டை, கேரட் ஜூஸ் மட்டும் சாப்பிட்டேன். படப்பிடிப்பு தளத்துக்கு 8 கிலோமீட்டர் நடந்தே சென்றேன்.
‘ஐ’ படத்தில் நடித்ததை நம்பவே முடியவில்லை. மணிரத்னம் எனது கனவு இயக்குநர். விரைவில் அவரது இயக்கத்தில் சரித்திர படமொன்றில் நடிக்கிறேன்.கல்லூரி நாட்களில் நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி 4 ஆண்டுகள் எனக்கு 23 அறுவை சிகிச்சைகள் நடந்தன. எனது வாழ்க்கையை சேதுவுக்கு முன்னால் சேதுவுக்குப் பின்னால் என்று பிரிக்கலாம். சேதுவுக்கு முன்பு எனது படங்கள் நன்றாகப் போகவில்லை. எனவே சேது தோற்றால் சினிமாவை விட்டு விலகிவிட முடிவு செய்து இருந்தேன்.ஆனால் அந்தப் படம் கொடுத்த வெற்றியால் இன்னும் நான் உற்சாகமாக சினிமாவை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறேன்.சென்னையில் நடந்த கடாரம் கொண்டான் பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் என்னைப் பாராட்டிப் பேசினார். அதை கேட்டுக் கண்கலங்கி விட்டேன். எனது ஒவ்வொரு படமும் ரசிகர்களிடம் சேர வேண்டும். நல்ல வசூல் பார்க்க வேண்டும் என்று உழைக்கிறேன்’என்றார்.
விக்ரமின் மகன் துருவ் நடிப்பில் பாலா இயக்கி பின்னர் கைவிடப்பட்ட ‘வர்மா’விவகாரத்திற்குப் பிறகு பாலாவின் பெயரை உச்சரிப்பதை சில மாதங்களாக விக்ரம் நிறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment