நடிகர் சங்கத் தேர்தல்: வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு!

நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்திவைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார். அதன்பின் விஷால் தரப்பு சட்டப் போராட்டம் நடத்தி தேர்தல் நடத்த அனுமதி வாங்கியது. இதனால் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எபாஸ் மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவே நடைபெற்றது.
 
இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி ஆதிகேசவலு தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது என்றும், வாக்குப் பெட்டிகளைப் பாதுகாத்து வைக்கவும் ஜூன் 21ஆம் தேதி உத்தரவிட்டார். இதனால் வாக்குப் பெட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு நேற்று (ஜூலை 8) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஜெயமணி, சுமதி, சாந்தி உட்பட 10 நடிகர் சங்க உறுப்பினர்கள் தங்களையும் வழக்கில் இணைக்க கோரி மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் பதில் மனுக்கள் தாக்கல் செய்த இடையீட்டு மனுதாரர்களுக்கு அனுமதி அளித்து வழக்கை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.
 
இதற்கிடையில் வாக்குகளை எண்ண அனுமதி அளிக்கக் கோரி விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.இதனிடையே வாக்குரிமை மறுக்கப்பட்ட பெஞ்சமின் உட்பட மூன்று பேரின் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இது தொடர்பாக உரிமையியல் வழக்கு தான் தொடர முடியும் என்றார். மேலும், மனுக்கள் திரும்ப பெற்றதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Comments