சர்வதேச விருதை தட்டிச்சென்ற சீனுராமசாமியின் 'கண்ணே கலைமானே'!

'தென்மேற்கு பருவக்காற்று', ‘நீர் பறவை', ‘இடம் பொருள் ஏவல்' 'தர்மதுரை' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. சமீபத்தில் இவர் இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் வெளியாகி பாராட்டுகளை பெற்றது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி, 'பூ' ராமு உள்பட பல நடிகர்கள் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். சீனு ராமசாமியின் படங்கள் பல விருதுகளை பெற்றிருக்கிறது.

தற்போது இவர் விஜய்சேதுபதியின் நடித்பில் ‘மாமனிதன்' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மூவரும் இணைந்து இசையமைக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. இயக்குனர் சீனுராமசாமியும் அதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாகக் கூறியிருந்தார். அவ்வாறு நிகழ்ந்தால் அது தமிழ் சினிமாவில் முக்கிய நிகழ்வாக இருக்கும்.
 
இந்நிலையில் இவர் இயக்கத்தில் வெளியான 'கண்ணே கலைமானே' திரைப்படம் மும்பையில் நடக்கும் தாதா சாகேப் சர்வதேச திரைப்பட விழாவுக்கும் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது. கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதையும் வென்றுள்ளது. இது தமிழ் திரையுலகுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வாக அமைந்திருக்கிறது. இவர் இயக்கிய தென்மேற்கு பருவகாற்று திரைப்படம் சிறந்த தமிழ்படத்திற்கான தேசிய விருது உட்பட மூன்று தேசிய திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது.  தர்மதுரை படத்தில் இடம் பெற்ற பாடலுக்காக வைரமுத்து தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Comments