தெற்கில் திரும்பும் ஐஸ்வர்யா கவனம்!

இந்தித் திரையுலகில் கவனம் செலுத்திவரும் ஐஸ்வர்யா ராய் தென்னிந்தியத் திரையுலகில் அடுத்தடுத்து இரு படங்களில் நடிக்கவுள்ளார்.பாலிவுட் நடிகையாக அடையாளப்படுத்தப்பட்டாலும் ஐஸ்வர்யா ராய் அறிமுகமானது தமிழ்த் திரையுலகில்தான்.மணிரத்னம்இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் அவர் பொன்னியின் செல்வனைத் தழுவி மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தமிழில் 5 படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் தெலுங்கில் ஒரு படத்தில்கூட கதாநாயகியாக நடிக்கவில்லை. ராவோயி சண்டமாமா என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தற்போது அவர் தெலுங்கில் முதன்முறையாக சீரஞ்சிவிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கொரட்டல சிவா இயக்கவுள்ளார்.
 
சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தியத் திரையுலக நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ள சை ரா நரசிம்மா ரெட்டி படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் படம் நிறைவடைந்ததும் ஐஸ்வர்யா நடிக்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Comments