வாடகை காரில் பயணம் செய்த நடிகையை திடீரென்று டிரைவர் தூக்கி வீசினார். இந்த சம்பவம்பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வங்காள மொழி படங்கள் மற்றும் டிவி சீரியல்களில் நடித்து வருபவர் சுவஸ்திகா தத்தா. இவர் தன்னை காரிலிருந்து தூக்கி வீசிய சம்பவம் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது வீட்டிலிருந்து படப்பிடிப்பிற்காக சவுத் கொல்கத்தா பகுதியில் உள்ள சினிமா ஸ்டுடியோ செல்வதற்கு தனியார் வாடகை காரை புக் செய்தேன். ஜாம்ஷெட் என்ற டிரைவர் காரை எடுத்து வந்து அழைத்துச் சென்றார். ஆனால் நடுவழியிலேயே காரை நிறுத்தி எனது புக்கிங்கை ரத்து செய்துவிட்டு காரிலிருந்து என்னை இறங்கும்படி கூறினார். படப்பிடிப்புக்கு நேரம் ஆனதால் காரிலிருந்து இறங்க மறுத்தேன். இதையடுத்து டிரைவர் காரை திருப்பிக்கொண்டு எனது வீடு உள்ள பகுதியில் கொண்டு வந்து நிறுத்தினார். பிறகு காரிலிருந்து இறங்கி வந்த டிரைவர் என்னை காரிலிருந்து தூக்கி வெளியே வீசினார். எனக்கு கோபம் வந்தது. அருகிலிருந்தவர்களை உதவிக்கு அழைத்தேன். உடனே டிரைவர் என்னை மிரட்டிவிட்டு, ‘உன்னால் என்ன முடியுமோ செய், நீ என்ன செய்கிறாய் என்று பார்த்துவிடுகிறேன் என மிரட்டல் தொனியில்பேசிவிட்டு சென்றார்.
எனக்காக படக்குழுவினர் ஸ்டுடியோவில் காத்திருந்ததால் நான் உடனே செல்ல வேண்டியிருந்தது. எனவே செல்போனில் எனது தந்தையை அழைத்து நடந்த சம்பவம்பற்றி கூறி சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை மேற்கொள்ளும்படி தெரிவித்தேன். இவ்வாறு சுவஸ்திகா தத்தா கூறி உள்ளார். ஃபேஸ்புக்கில் நடிகை வெளியிட்ட இந்த மெசேஜை கண்ட கொல்கத்தா போலீசார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் நடிகைக்கு மேசேஜ் அனுப்பினார்கள். அதில், ‘உங்களுடைய புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என குறிப்பிட்டிருந்தனர்.
மேற்கொண்டு விசாரணை நடத்தி டிரைவரை கைது செய்தனர்.
Comments
Post a Comment