தடம் இயக்குநருடன் கைகோர்த்த உதயநிதி!

தடம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின், மகிழ் திருமேனி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய், தன்யா ஹோப், வித்யா பிரதீப் நடிப்பில் இந்தாண்டு வெளியான தடம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் மகிழ் திருமேனி விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் வெங்கட கிரிஷ்ணா ரோகாந்த் இப்படத்தை இயக்குகிறார்.
 
இந்நிலையில், மகிழ் திருமேனி இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தடம் படத்தின் ரிலீசுக்கு முன்பே உதயநிதியிடம் இப்படத்திற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளாராம் மகிழ். தற்போது இப்படத்தின் திரைக்கதை பணிகளில் நடைபெற்று வரும் நிலையில், தடம் போலவே விறுவிறுப்பான படமாக இப்படமும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட சிறிய இடைவெளியை அடுத்தடுத்து ஒப்பந்தமாகும் புதிய படங்களின் மூலம் நிறைவு செய்து வருகிறார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் சைக்கோ, கே.எஸ். அதியமானின் ஏஞ்சல், மு. மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே போன்ற படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

Comments