டி.ராஜேந்தரின் சமகால நாயகர்களில் ஒருவரான கேப்டன் விஜயகாந்த் எம்.ஜி.ஆரைப் பின்பற்றிய நாயகர்களில் மற்ற யாரும் பெற முடியாத வெற்றிகளைப் பெற்றார். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட கால அவகாசம் நீண்டது. ஆனால் 1970-80களின் இளம் தலைமுறை நடிகர்களில் பலர் எம்.ஜி.ஆரின் பாணியைப் பின்பற்றாமலேகூட அரசியலில் குதித்து நிலைபெற்றார்கள். சிறிய அளவிலான வெற்றிகளைப் பெற்றார்கள்.
அவர்களில் நடிகர் சந்திரசேகருக்குக் கிடைத்த இடம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.
மற்றவர்களைப் போல் சந்திரசேகர் நாயகனாக அறிமுகமானவர் அல்ல. 1970களின் இறுதியில் தனது படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த சந்திரசேகரை சோதனை முயற்சியாக நிழல்கள் படத்தின் மூன்று நாயகர்களில் ஒருவராக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அவர் இயக்கிய கல்லுக்குள் ஈரம் படத்திலும் சந்திரசேகருக்கு முக்கிய வேடம். அதே தருணத்தில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற பாலைவனச் சோலை படத்தில் கிட்டத்தட்ட நாயகன். தமிழ் ரசிகர்களின் மனதை உலுக்கிய அந்தக் காதல் கதையில் சந்திரசேகருக்கு நெகிழ வைக்கும் வேடம். அவர் அதைச் சிறப்பாகச் செய்தார். ஆனால் அடுத்ததாக ராமநாராயணன் இயக்கத்தில் வெளிவந்த சிவப்புமல்லி அவருக்குப் புரட்சியாளனின் அடையாளத்தைப் பெற்றுத் தந்த படம். அந்தப் படத்தின் நாயகர்களான விஜய்காந்த், சந்திரசேகர் மட்டுமல்லாது இயக்குநர் ராமநாராயணனும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வெற்றி பெற்றனர்.
அந்தப் படம் இந்தியப் பொதுவுடமை இயக்கங்களின் ஆதரவாளர்களால் பெரிதாகக் கொண்டாடப்பட்டது.
தொழிற்சங்கவாதிகளான விஜய்காந்தும் சந்திரசேகரும் அரிவாள், சுத்தியல் சின்னம் பொறிக்கப்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியை உயர்த்திப் பிடித்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்ற காட்சியைப் பார்த்த கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்கள் அந்தக் காட்சியைத் தாங்கிய போஸ்டர்களைத் தம் கட்சி அலுவலகங்களில் வைத்தார்கள். அன்றைய தோழர்கள் சிலருக்கு விஜய்காந்தும் சந்திரசேகரும் கம்யூனிஸ்டுகளாகவே ஆகிவிட்டதாக ஒரு கற்பனைகூட இருந்தது.
விஜயகாந்த் தே.மு.தி.கவைத் தொடங்குவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே சந்திரசேகர் அரசியலில் குதித்தார். திமுகவின் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது சிறுசேமிப்புத் திட்டக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்ட சந்திரசேகர் கொள்கைப் பற்று மிக்க தொண்டனாக இன்று வரை திமுகவில் நீடிக்கிறார். தற்போதைய வேளச்சேரி சட்டமன்ற திமுக உறுப்பினரான சந்திரசேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு தன் பெயரை வாகை சந்திரசேகர் என மாற்றிக்கொண்டார். வாகை என்பது வெற்றிபெற்றவர்கள் சூடிக்கொள்ளும் மலர், சந்திரசேகர் அந்த அர்த்தத்தில் தன் பெயரை மாற்றிக்கொண்டாரா, தன் சொந்த ஊரான வாகைக்குளத்தை நினைவூட்டும் விதத்தில் வாகை என்னும் அடைமொழியை இணைத்துக்கொண்டாரா எனத் தெரியவில்லை.
1991இல் சில கூட்டங்களில் அவரோடு தவறாது இடம்பெற்றவர் நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன். சந்திரசேகருக்கு முன்பாகவே அரசியலில் பதவி பெற்றவர் எஸ்.எஸ்.சந்திரன். அவரும் ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக திமுகவிலிருந்து வெளியேறி அதிமுகவில் சேர்ந்து அம்மாவின் அன்பைப் பெற்று மாநிலங்களவை உறுப்பினராக ஆனார். எஸ்.எஸ்.சந்திரனைப் போன்ற நகைச்சுவை நடிகர்கள் அரசியலில் செல்வாக்குப் பெற்றது அவ்வப்போது நடந்திருக்கிறது. தமிழ் நகைச்சுவை நடிகர்களின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தீவிரமான அரசியல் பார்வை கொண்டவராக விளங்கினார். காந்தியம் சார்ந்த சமூக சீர்திருத்தக் கருத்துகளைத் தன் படங்களில் வெளிப்படுத்திய என்.எஸ்.கிருஷ்ணன் இன்று வரை நினைவுகூரப்படும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்.
எம்.ஜி.ஆரும் சிவாஜியும் கோலோச்சிய காலங்களில் புகழ் பெற்று விளங்கிய சந்திரபாபு, கே.ஏ. தங்கவேலு, டி.எஸ்.பாலையா, நாகேஸ் உள்ளிட்ட யாரும் அரசியலில் அக்கறை செலுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் பிற்காலத்தில் அவர்களது சில படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களை ஏற்று நடித்த சோ.ராமசாமி நேரடி அரசியலில் ஈடுபடாவிட்டாலும் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கினார்.
சோ.ராமசாமி திரைப்படத்துறையில் நகைச்சுவை நடிகராகச் சில ஆண்டுகள் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்ததைவிட பத்திரிகையாளராகச் செயல்பட்ட காலங்கள் அதிகம். நாடக ஆசிரியர், இயக்குநர். கதை வசனகர்த்தா எனப் பன்முக அடையாளங்களைக் கொண்டிருந்த சோ முதன்மையாக ஒரு அரசியல் விமர்சகர். பொதுவாக திராவிட இயக்க அரசியலின் கடுமையான விமர்சகர். திமுகவையும் அஇஅதிமுகவையும் தனது இதழியல் செயல்பாடுகளின் வழி கேலி செய்தார். தேசிய அளவில் காங்கிரசைக் கடுமையாக எதிர்த்தார். தனது திரைப்படங்களில் அரசியல் நையாண்டியை நகைச்சுவைக்கான கூறாகப் பயன்படுத்திக்கொண்டார். திரைப்படங்களில் தான் பேசிய வசனங்களைத் தானே எழுதிக்கொண்டிருப்பார் எனக் கருதுமளவுக்கு அவற்றில் அவரது அரசியல் பார்வைகள் இடம்பெற்றிருக்கும். எம்.ஜி.ஆர்., திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட தருணத்தில் அவர் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்த காட்சியில் பேசிய வசனமொன்று நினைவுக்கு வருகிறது,
‘கணக்குக் கேக்காதே, கணக்குக் கேட்டா ஒண்ணு நீ வெளிய போகணும், இல்ல நா வெளிய போகணும்’
இந்த வசனத்திற்குக் கிடைத்த கைதட்டல்கள் அரசியல் சார்ந்தவை என்பதில் சந்தேகமில்லை. அவசரநிலையைக் கடுமையாக எதிர்த்த சோ இந்திராவின் அரசியலை நையாண்டி செய்யும் திரைப்படமொன்றைத் தயாரித்து இயக்கி நடித்தார். ‘முகமது பின் துக்ளக்’ என்னும் அந்தப்படம் பலரது எதிர்ப்புகளைச் சந்தித்தது, இந்திராவின் எதிர்ப்பாளர்கள் அந்தப்படத்தைக் கொண்டாடினார்கள். அவசரநிலையைத் தொடர்ந்து உருவான ஜனதாக் கட்சியை ஆதரித்த சோ அது உடைந்த பிறகு பா.ஜ.கவை ஆதரித்தார். தீவிரமான இந்து ஆதரவாளர் என விமர்சிக்கப்பட்ட சோ எம்.ஜி.அர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களோடு நல்லுறவைப் பேணி வந்தார். அவர்களுக்கு அரசியல் ரீதியில் ஆலோசனைகள் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் அவரளவுக்கு எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் விமர்சித்தவர், கேலி செய்தவர் யாருமில்லை. சோ கருணாநிதியோடும் நட்புப் பாராட்டினார். எனினும் சோ நேரடியாகக் கட்சி அரசியலில் ஈடுபடவில்லை. 2004இல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் பரிந்துரையின் பேரில் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டு அந்தப் பதவியில் ஆறாண்டுகள் நீடித்தார்.
1980களில் தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக விளங்கியவர் எஸ்.வி.சேகர். அவரும் தீவிர அரசியலில் ஈடுபட்டார். அஇஅதிமுகவில் சேர்ந்து தேர்தலைச் சந்தித்து மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எஸ்.வி.சேகர் பின்னர் பா.ஜ.கவில் ஐக்கியமானார். அவ்வப்போது அவர் வெளியிடும் சர்ச்சைக்குரிய கருத்துகளால் பலரது எதிர்ப்புக்களைச் சந்தித்து வருகிறார். எம்.ஜி.ஆரின் சில திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த ஐசரிவேலன் எம்.ஜி.ஆரால் தமிழக மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சில வருடங்கள் துணை அமைச்சராகப் பணிபுரிந்தார். இவர்களைப் போன்ற ஓரிருவரைத் தவிர நகைச்சுவை நடிகர்கள் அதிக அளவில் செல்வாக்குப் பெறவில்லை. சென்ற 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்த நகைச்சுவை நடிகர் வடிவேலு அந்தத் தேர்தலில் திமுக பெற்ற தோல்விக்குப் பின்னர் அரசியலிலிருந்து விலகினார்.
நகைச்சுவை நடிகர்களைப் போலவே அரசியலில் ஈடுபட்டு சிறிய அளவிலான வெற்றிகளைப் பெற்ற வில்லன் நடிகர்களும் இருக்கிறார்கள். உதாரணம் ராதாரவி. அவரது தந்தை எம்.ஆர்.ராதா நடிகவேள் எனக் கொண்டாடப்பட்டவர். நேரடி அரசியலில் ஈடுபடாவிட்டாலும் திராவிட இயக்கக் கருத்துகளின் மீது தீவிரப் பற்றுக்கொண்டவர். தனது நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பெரியாரின் பகுத்தறிவுக்கொள்கையைப் பரப்பியவர். எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக விளங்கியவர். அவரது பல திரைப்படங்களில் முக்கிய வேடமேற்று நடித்தவர். அவர்தான் பிறகு எம்.ஜி.ஆரைத் துப்பாக்கியால் சுட்டார்.
Comments
Post a Comment