கவர்ச்சி என்பது, அவரவர் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது: மகிமா நம்பியார்!

சாட்டை படம் மூலம், தமிழில் அறிமுகமான, மகிமா நம்பியார், தற்போது, விக்ரம் பிரபு உடன், அசுரகுரு, ஆர்யா உடன், மகாமுனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவருடன் பேசியதிலிருந்து:

அசுரகுரு படத்தில் நடித்த அனுபவம் எப்படி?
நாயகனுடன், டூயட் பாடுகிற மாதிரி அல்லாமல், இந்த படத்தில், வித்தியாசமான பாத்திரம் கிடைத்துள்ளது. இதற்கு முன் நடித்த படங்களில், கடத்தலுக்கு உட்பட்ட நான், அசுரகுருவில், கடத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்கும், டிடெக்டிவ் பாத்திரத்தில் நடித்துள்ளேன்.

விக்ரம் பிரபு உடன் நடித்த அனுபவம் எப்படி?
விக்ரம் பிரபுவின் நடிப்பை, கும்கி உள்ளிட்ட படங்களில் பார்த்துள்ளேன். அவருடன், முதல் முறை நடித்தேன். சினிமா பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். அவரதுநடிப்பை பற்றி அல்லாமல், அவர் நடிக்கும் முந்தைய மற்றும் பிந்தைய காட்சிகள் குறித்தும் அறிந்து கொள்கிறார். அவர் பேச வேண்டிய வசனம் மட்டுமின்றி, அடுத்தவரின் வசனத்தையும், 200 சதவீதம் ஞாபகம் வைத்துள்ளார். அவருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. முதல் காட்சி யிேலயே, பைக்கில் அவரை பின்னால் அமர வைத்து ஓட்டினேன்.

மகாமுனி படம் குறித்து?
மகாமுனி படத்தில், தீபா என்ற ஜர்னலிஸம் மாணவியாக நடிக்கிறேன். இதுவரை அந்த மாதிரி பாத்திரத்தில், என்னை ரசிகர்கள் பார்த்தது இல்லை. மகாமுனி படத்தில், நானே டப்பிங் பேசியுள்ளேன்.

சாட்டை - 2 படத்தில் ஏன் நடிக்கவில்லை?
சம்பளம் அதிகமாக கேட்டதால் நடிக்கவில்லை என்ற தவறான தகவல் வெளியானது. ஆனால் உண்மையிலேயே, அவர்கள் என்னை அணுகவில்லை என்பதால், அதில் நடிக்கவில்லை.

திரையுலகில் யாரை போல் வர விரும்புகிறீர்கள்?
அந்த மாதிரி எதிர்கால திட்டம் எதுவும் இல்லை. நல்ல பாத்திரங்களில் நடிக்க வேண்டும். எனக்கு பெயர் வாங்கித் தரும்படியான பாத்திரங்களை வரவேற்கிறேன்.

உங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை?
அஜித், நயன்தாரா, சமந்தா ரொம்ப பிடிக்கும். அஜித்தின் ஹேர் ஸ்டைல் ரொம்ப பிடிக்கும்.

வேலுநாச்சியார் போன்ற வரலாற்று கதைகளில் நடிப்பீர்களா?
நடிக்க வந்து விட்டால், அனைத்து வேடத்திலும் நடிக்க வேண்டும். எந்த மாதிரி சவாலான பாத்திரம் வந்தாலும், அதை தவறவிட மாட்டேன்.

உங்களது கவர்ச்சி எல்லை எதுவரை?
கவர்ச்சி என்பது, அவரவர் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. அதிகமான கவர்ச்சிக்கு, நான் பொருந்த மாட்டேன். ரசிகர்கள் விரும்பும் மாதிரி தான், நடிக்க முடியும். எனக்கு ஒரு எல்லை உள்ளது; அதுவரை நடிப்பேன்.

பொது சேவையில் ஈடுபட விருப்பம் உள்ளதா?
நாட்டில், பெண்கள் பாதுகாப்பு பெரிய பிரச்னையாகவே உள்ளது; எல்லா ஆண்களையும் குறை சொல்ல மாட்டேன். நிறைய செய்திகளை படிக்கும் போது, பெண்களுக்கான முழு சுதந்திரம் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது.பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களை பார்க்கும் போது, அவர்களை கொலை செய்யலாமா என, தோன்றும் அளவுக்கு கோபம் வரும். பெண்கள் பாதுகாப்புக்கு ஏதாவது செய்ய முடிந்தால், கண்டிப்பாக செய்வேன்.

Comments