நடிகை இனியாவுக்கு இப்படி ஒரு முகம் இருக்குன்னு இனியாவது தெரிஞ்சுக்கங்க பாஸ்!

தமிழில் தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் இனியா.அந்த வகையில் தற்போது தமிழில் ‘காபி’, மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலாற்று படமான ‘மாமாங்கம்’, பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் ‘தாக்கோல்’ மற்றும் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் 'துரோணா' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இனியா. இந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக இருக்கின்றன.
 
கடந்த வருடம் மலையாளத்தில் ‘பரோல்' மற்றும் 'பெண்களில்ல’ ஆகிய படங்களில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகையாக 2018ஆம் வருடத்திற்கான 'கேரளா ஃபிலிம் கிரிட்டிக்' விருதைப் பெற்றுள்ளார் இனியா. அதுமட்டுமல்ல பரோல் படத்தில் நடித்ததற்காக 2018 ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகைக்கான 'பிரேம் நசீர் பவுண்டேஷன்' விருதையும் பெற்றுள்ளார்.. 2018 ஆம் வருடம் தனக்கு மகிழ்ச்சிகரமான ஒரு ஆண்டாக அமைந்து விட்டதாக கூறும் இனியா, 2019ஆம் வருடமும் இதேபோல மிக சிறந்ததாக இருக்கும் என நம்புகிறார்.
 
நடிப்பு ஒருபக்கம் இவரை மொழி பாகுபாடில்லாமல் துரத்திக் கொண்டிருக்க இனியாவோ, தனக்கு ஆத்மார்த்த திருப்தி தரும் இசையையும் நடனத்தையும் துரத்திக் கொண்டு இருக்கிறார். ஆம்.. இசை மற்றும் நடனம் மீது தீராத காதல் கொண்டவர் இனியா. இதனாலேயே நடிகைகளில் எவரும் இதுவரை செய்திராத ஒரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் இனியா. 
 
மியா' என்கிற வீடியோ இசை ஆல்பத்தை 'அமையா என்டர்டெய்ன்மென்ட்' நிறுவனத்தின் மூலம் தானே சொந்தமாக தயாரித்துள்ளார் இனியா.. இந்த பாடலை டீம் மியா குழுவினர் உருவாக்கியுள்ளனர்.
'Lets dance' என்கிற சர்வதேச நடனப்போட்டியில் கலந்து கொள்ளவதற்கு திறமை இருந்தும் தயங்கி நிற்கும் ஒரு பெண்ணிற்கு, எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக வந்து முறையாக நடனத்தைக் கற்றுக் கொடுத்து அவரை வெற்றிபெற செய்கிறான்.. இதுதான் இந்த வீடியோ ஆல்பத்தின் கான்செப்ட். நடனம் கற்றுக் கொள்ளும் மியா என்கிற பெண்ணாக இனியா நடித்துள்ளார். இந்த இசை ஆல்பத்தை பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான Divo மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார் இனியா..
 
இதுபற்றி இனியா கூறும்போது, “நான் ஒரு டான்சர் என்றாலும் இதுவரை நிறைய மேடைகளில் தான் ஆடியிருக்கிறேன்.. ஆனால் முதன்முறையாக பாட்டையும் நடனத்தையும் ஒன்றிணைத்து அதை மியூசிக் வீடியோவாக வெளியிட்டுள்ளேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆல்பத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய ‘டீம் மியா’வுக்கு மிகப்பெரிய வளர்ச்சி இருக்கும் என்றும் உறுதியாக கூறுகிறேன்.. மியா டீமில் பணியாற்றிய தொழில்நுட்ப குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இதை வெளியிட்டுள்ள பிரபல இசை வெளியீட்டு நிறுவனமான Divo மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கும் மற்றும் beyond frames நிறுவனத்திற்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.அதுமட்டுமல்ல, விரைவிலேயே தனது நிறுவனம் மூலம் திரைப்படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார் இனியா.

Comments