த்ரிஷா நடிப்பில் உருவாகி நீண்ட நாள்களாக வெளியாகாமல் உள்ள கர்ஜனை படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகிவருகின்றன.சுந்தர் பாலு இயக்கத்தில் உருவாகியுள்ளது கர்ஜனை. காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்முறை செய்து கொலை செய்யும் கும்பல் பற்றிய உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்த படத்தில் த்ரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2017ஆம் ஆண்டு நடைபெற்றது. ஏற்கெனவே இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றிருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. தற்போது ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் குறித்து இயக்குநர் சுந்தர் பாலு, “தாமதம் ஏற்பட்டது வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் விரைவில் படம் திரையரங்கிற்கு வரவுள்ளது. வழக்கமான தயாரிப்பு தாமதம்தான். 2017ஆம் ஆண்டு 27 நாள்களில் படப்பிடிப்பை நிறைவு செய்தோம். 2018 தொடக்கம் வரை கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்றன. பலரும் இந்தப் படத்தை எதிர்பார்த்துள்ளனர். கடின உழைப்பை இதில் செலுத்தியுள்ளோம். முழுநீள ஆக்ஷன் படம் என்பதால் த்ரிஷா சண்டைப் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். நம்பகத்தன்மைக்காக அவரே சண்டைக் காட்சிகளில் நடித்தார். ஆகஸ்டில் படம் வெளியாவது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் செய்தி” என்று கூறியுள்ளார்.
சுந்தர் பாலு தற்போது வரலட்சுமி, சுபிக்ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஸ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகள் இனைந்து நடிக்கும் கன்னித்தீவு படத்தை இயக்கிவருகிறார்.
Comments
Post a Comment