விஷால் - சுந்தர்.சி கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோக்யா விவாதத்துக்குள்ளானது. சிக்கலுக்கு பின் வெளியான இப்படம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. படத்தில் இடம்பெற்ற கண்ணே கண்ணே பாடல் இந்தாண்டின் ஹிட் பாடல்களுள் ஒன்றானது. அதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத் தேர்தலில் கவனம் செலுத்தி வந்த விஷால், தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து வருகிறார்.
மதகஜராஜா, ஆம்பள படங்களைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் மூன்றாவது முறையாக கதாநாயகனாக நடித்துவருகிறார் விஷால். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு துருக்கி, அசர் பைஜான் போன்ற அழகிய லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டு வந்தது. வெளிநாடுகளில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்து முடித்த படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு முன் சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டது.
இந்த நிலையில், நேற்று(ஜூலை 3) இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. தொடர்ந்து பதினைந்து நாட்கள் படத்தின் முக்கியமான காட்சிகள் அங்கே படமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். விக்ரம் வேதா படத்தை தயாரித்த ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆர். ரவீந்திரன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2-வில் நடிக்கவுள்ளார் விஷால்.
Comments
Post a Comment