எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே!

நாயகன் ஜெகன் தனது மாமா மகளான நாயகி மனிஷாஜித்தை காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். ஆனால் இவர்களின் திருமணத்திற்கு மனிஷாவின் அண்ணன் சாம்ஸ் முட்டுக்கட்டை போடுகிறார். தனது தங்கையை போலீஸ் துறையில் சாதித்தவனுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என திட்டவட்டமாக கூறிவிடுகிறார் சாம்ஸ். போலீசை பார்த்தாலே பயந்து ஓடும் ஜெகன் காதலிக்காக, போலீஸ் ஆகலாம் என முடிவெடுக்கிறார்.
 
இந்த சூழலில் ஹெட் கான்ஸ்டேபிலாக இருக்கும் நண்பனின் உதவி மூலம் ஜெகன் போலீசாகிவிடுகிறார். இந்நிலையில், அதே ஊரில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார் பிறைசூடன். அவரின் மகளான டிசோசா, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நிருபர் விவேக்ராஜை காதலிக்கிறார். இது பிறைசூடனுக்கு தெரியவர, மகள் டிசோசாவை கண்டிக்கிறார். ஆனால் டிசோசா, காதலன் விவேக்ராஜை தான் கரம்பிடிப்பேன் என தந்தை பிறைசூடனிடம் துணிச்சலாக சொல்லி விடுகிறார்.
 
டிசோசா தனது காதலனுடன் ஜெகன் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று எங்களுக்கு திருமணம் செய்து வைக்க கோரி கேட்கிறார். இதையேற்று ஜெகன் திருமணம் செய்து வைக்கிறார். இந்த விஷயம் பிறைசூடனுக்கு தெரியவர, ஜெகனுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறார். இந்த தொல்லையில் இருந்து மீண்டு போலீஸ் துறையில் சாதித்தாரா? காதலி மனிஷாவை ஜெகன் கரம்பிடித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
 
காமெடியனாக இருந்த ஜெகன் இந்த படம் மூலம் கதாநாயகனாக மாறி இருக்கிறார். தனக்கு பொருத்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். ஆக்‌‌ஷன், எமோ‌ஷனல் இல்லாமல் காமெடி நாயகனாக வருகிறார். சீரியசான கதாநாயகனாக விவேக் ராஜ். நடிப்பில் குறை வைக்கவில்லை. மனிஷா ஜித், டிசோசா இருவரும் கவர்ச்சி, காதல் காட்சிகளில் விருந்து படைக்கிறார்கள். வில்லனாக பிறைசூடன் கச்சிதமான நடிப்பு. சாம்ஸ், அம்பானி சங்கர், ரவிகுமார், நிகிதா ஆகியோரும் சரியான தேர்வுகள்.
எளிமையான கதையை அதில் காதலையும் நகைச்சுவையும் சேர்த்து திரைக்கதையாக்கி இருக்கிறார் காரைக்குடி நாராயணன். முருகலிங்கம் இயக்கத்தில் இளமை துள்ளுகிறது. சிவராஜின் ஒளிப்பதிவும் கவின் சிவாவின் இசையும் படத்துக்கு தேவையான பங்களிப்பு வழங்கியுள்ளன.

Comments