விஜய் நடிக்கும் பிகில் படம் பற்றிய அறிவிப்புகள், டீசர், டிரெய்லர் ஆகியவற்றை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் ‘விஜய் 64’ படத்தின் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகிய நடிகைகளும் இணைந்து நடிக்கின்றனர். இந்நிலையில் ‘விஜய் 64’ படத்தில் இரு கதாநாயகிகள் இணையவுள்ளதாக திரைத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் விஜய் 64 படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் ராஷ்மிகா, ராஷிகண்ணா ஆகிய இரு நடிகைகள் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையேயும் அறிமுகமானவர் ராஷ்மிகா. பிகில் படத்தில் நயன்தாராவின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது. அப்போது இது குறித்து பேசிய அவர், “விஜய் மற்றும் அட்லியின் அடுத்த படத்தில் நான் இருக்கிறேனா என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறீர்கள். இந்த முறை அது நடக்கவில்லை. ஆனால், விரைவில் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் மூலம் அது சாத்தியமாகும் என்று தெரிகிறது.
தெலுங்கு திரையுலகிலிருந்து தமிழுக்கு வந்து கவனம் ஈர்த்துள்ள மற்றொரு நடிகை ராஷி கண்ணா. இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்த அவர் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துவருகிறார்.மெர்சல், சர்கார், பிகில் என தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நடித்துவரும் விஜய் அடுத்ததாக விஜய் 64 படத்தில் அனிருத் இசையில் நடிக்கவுள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு பிகில் படத்தின் வெளியீட்டிற்கு பின்னரே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment