KJR ஸ்டுடியோஸ் வெளியிடும் தும்பா வரும் ஜூன் மாதம் 21ஆம் தேதி வெளியாகிறது!

ரீகல் ரீல்ஸ் (OPC) பிரைவேட் லிமிடெட் சுரேகா நியாபதி, ரோல் டைம் ஸ்டுடியோஸ் LLP உடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தும்பா’. தர்ஷன், கீர்த்தி பாண்டியன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, தும்பா என்ற பெண் புலி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை ஹரீஷ் ராம் LH இயக்கியிருக்கிறார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. KJR ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் மிக பிரமாண்டமாக வெளியிடும், இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

நாங்கள் வசனம் எழுதும்போது, எந்த கதாபாத்திரத்தில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நான் எழுதிய வசனங்களை தர்ஷன், கீர்த்தி, தீனா எல்லோருமே அதன் சாராம்சம் குறையாமல் பேசியிருக்கிறார்கள். எங்கள் எல்லோருக்கும் இந்த படத்தின் மூலம் ஒரு புது முகவரி கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் வசனகர்த்தா ராம் ராகவ்.

மொத்த படத்தையும் காட்டில் படம் பிடிக்கப் போகிறோம் என்றதும், அதற்கு என்ன பட்ஜெட் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் செலவு செய்த தயாரிப்பாளருக்கு நன்றி. காட்டில் இருப்பது ஒரு தலைசிறந்த அனுபவம், அந்த அனுபவத்தை அனைவருக்கும் கொண்டு சேர்க்க உழைத்திருக்கிறோம். படம் பார்த்து முடிக்கும் ஒவ்வொருவருக்கும் காட்டில் பயணித்த அனுபவம் நிச்சயம் கிடைக்கும், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்றார் ஒளிப்பதிவாளர் நரேன் இளன்.
 
இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் ஹரீஷ்க்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர் கொடுத்த சுதந்திரம் தான் நாங்கள் அனைவரும் சிறப்பாக நடிக்க காரணம். முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட திரைப்படம், குடும்பத்தோடு ரசிக்கும் வகையில் இருக்கும். அருண் பாண்டியன் மகள் கீர்த்தி, காட்டில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார். இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பக்கபலமாக இருக்கும். இது ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்றார் நடிகர் ஜார்ஜ்.

என்னையெல்லாம் நடிக்க வைக்கிறீங்களே, யார் பார்ப்பாங்க என நானே இயக்குனரிடம் கேட்டேன். என் கதைக்கு, அந்தந்த கதாபாத்திரத்துக்கு யார் தேவையோ அவர்களை தான் நடிக்க வைக்கிறேன் என இயக்குனர் சொன்னார். நாங்கள் படப்பிடிப்பில் இருந்த 35 நாட்கள் எங்களுக்கு மிகச்சிறந்த நாட்களாக இருந்தன, எங்கள் மூவருக்குள் கெமிஸ்ட்ரி முதல் நாளில் இருந்தே செட்டானது. இது அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படமாக இருக்கும் என்றார் நடிகர் தீனா.
தும்பா எனது அறிமுகப்படம், இது எனது முதல் படமாக அமைந்தது எனது வரம். என் வாழ்க்கையில் நான் எப்படி இருப்பேனோ அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறேன். சிறந்த விதத்தில் VFX காட்சிகளை கொடுக்க, காட்டில் எங்களுடன் பயணித்து கடுமையாக உழைத்தார்கள் ரங்கா மற்றும் வில்லவன் கோதை சார். நடிகர்களான எங்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்தார் இயக்குனர் ஹரீஷ். என் தோற்றத்தை பற்றிய எந்த விதமான கருத்தும் சொல்லாமல், எனக்குள் தன்னம்பிக்கையை விதைத்தவர். 3 வருடங்களாக நான் நிறைய முயற்சிகள் எடுத்திருக்கிறேன், என் தன்னம்பிக்கையை குலைக்கும் விதமான கருத்துக்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் ஹரீஷ் அந்த விதத்தில் எனக்கு கிடைத்த வரம். உன் நடிப்பை மட்டும் கவனி, நம்பிக்கையோடு நடி என எனக்கு ஊக்கம் தந்தார் ஹரீஷ். குடும்பத்தோடு வந்து பார்க்கலாம், ஒரு தூய்மையான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்றார் நடிகை கீர்த்தி பாண்டியன்.

கனா படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு மீடியா, அருண்ராஜா அண்ணன், சிவகார்த்திகேயன் அண்ணன் ஆகியோருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த படத்தில் சிஜி பெரும்பகுதி இருக்கும், அதை நாங்களே கற்பனை செய்து தான் நடிக்க வேண்டும். அதனால் எங்கள் எல்லோருக்கும் 4 நாட்கள் ஒரு ஒர்க்‌ஷாப் வைத்தார். நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். அதில் இருந்து உடனடியாக நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்கள் ஆனோம். கீர்த்தி ஒரு சிறந்த நடிகை, படப்பிடிப்பில் அவர் நிறைய நம்பிக்கை கொடுப்பார், இந்த படமும் அனைவரும் ரசிக்கும் படமாக அமையும் என்றார் நடிகர் தர்ஷன்.

இந்த படத்தின் மூலக்கதை என் நண்பர், இணை இயக்குனர் பிரபாகரன் அவர்களுடையது. இந்த படத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க மிக முக்கிய காரணம் ஒளிப்பதிவாளரின் ஒத்துழைப்பும், திட்டமிடலும் தான். சிஜி நிறைந்த படம் என்பதால் படத்தொகுப்பாளரின் வேலை இந்த படத்தில் மிகவும் கடினமானது. இந்த படத்தின் இரண்டு மிக முக்கிய அம்சங்கள் VFX மற்றும் சவுண்ட் டிசைன். குழந்தைகள் இந்த படத்தை மிகவும் ரசிப்பார்கள். அனிருத், சந்தோஷ் தயாநிதி, விவேக் மெர்வின் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்றெல்லாம் கிடையாது. எல்லோருமே முக்கிய கதாப்பாத்திரங்கள். நாயகி கீர்த்தியின் திறமை தான் அவரை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த மாதிரி ஒரு சின்ன படம் இந்தளவுக்கு மக்களை சென்று சேர காரணம் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் சாரின் புரமோஷன் தான் காரணம் என்றார் இயக்குனர் ஹரீஷ் ராம் LH.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், தயாரிப்பாளர் சுரேகா நியாபதி, சவுண்ட் டிசைனர் வினய் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் கலைவாணன், வசனகர்த்தா பிரபாகரன் ஏஆர், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, நடிகர் பாலா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.



Comments