நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, அஜித் அடுத்த படத்தில் கார் பந்தய வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ என்ற இந்தி படம் தமிழில், ‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து, எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அமிதாப்பச்சன் நடித்த வேடத்தில், அஜித்குமார் நடித்து இருக்கிறார். இது, அவருக்கு 59-வது படம். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். வினோத் டைரக்டு செய்து இருக்கிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்துள்ளார்.
போனிகபூரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இது முதல் தமிழ் படம். இந்த படம் வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் அஜித் தனது 60-வது படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தையும் வினோத் இயக்க இருக்கிறார்.
இது, முழுக்க முழுக்க அதிரடி சண்டை படமாகவும், கார் பந்தய வீரராக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இயக்குனர் வினோத், அஜித்தின் 60வது படத்தின் வேலைகள் இன்னும் தொடங்கவில்லை என்றும் நேர்கொண்ட பார்வை படம் வெளியான பிறகுதான் கதைக்கான வேலைகளில் ஈடுபடுவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
Comments
Post a Comment