ஷங்கர் கிராபிக்ஸ் காட்சிகளை வைத்து தான் இன்று வரையிலும் இயக்குனராகத் தொடர்கிறார்: கிண்டலடித்த வடிவேலு!

தமிழ்த் திரையுலகில் தன் நகைச்சுவை நடிப்புக்கென்று மிகப்பெரும் ரசிகர் கூட்டத்தைச் சேர்த்து வைத்திருப்பவர் வடிவேலு. இன்றைய மீம்ஸ்கள் பலவற்றிலும் அவர் தான் கதாநாயகன். கடந்த வாரம் அவருடைய நகைச்சுவை கதாபாத்திரமான நேசமணி உலக அளவில் டிரெண்டாகி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு படத்தின் கதாபாத்திரம் இப்படி திடீர் என டிரெண்ட்டானதெல்லாம் ஒரு மாயம் தான்.

நேசமணி டிரெண்டானதும் வடிவேலுவைத் தொடர்பு கொண்டு பலரும் பேட்டி எடுத்தனர். முதலில் அது பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாத வடிவேலு, நேற்று ஒரு இணையதளத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பல விஷயங்களை அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார். முக்கியமாக இம்சை அரசன் 24ம் புலிகேசி பட விவகாரத்தைப் பற்றி பயங்கர கிண்டலுடன் குறிப்பிட்டுள்ளார்.

சிம்புதேவனுக்கு படமே இயக்கத் தெரியாது என்றும் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்திற்கே தான்தான் யோசித்து கதாபாத்திர வடிவமைப்பு, நகைச்சுவைக் காட்சிகளை உருவாக்கியதாகவும் கூறியுள்ளார். 24ம் புலிகேசி படத்திற்காக ஒரு வரிக் கதையுடன் மட்டுமே வந்த இயக்குனரிடம் மூன்று வேடங்கள், மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் என டிஸ்கஸ் செய்து அந்தப் படத்தை முழு வடிவிற்குக் கொண்டு வர தான்தான் உழைத்ததாகவும் கூறியிருக்கிறார்.

அதோடு இயக்குனர் ஷங்கர் கிராபிக்ஸ் காட்சிகளை வைத்து தான் இன்று வரையிலும் இயக்குனராகத் தொடர்கிறார் என்ற ரீதியில் கிண்டலடித்துள்ளார். மேலும், ஷங்கர் ஒரு கிராபிக்ஸ் டைரக்டர் என்று குறிப்பிடுகிறார் வடிவேலு.

வடிவேலுவின் இந்த பேச்சு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments