ராஜராஜன் பற்றி சர்ச்சை பேச்சு : அட்டகத்தி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான பா.ரஞ்சித் கைதாகிறார்.?

மாமன்னர் ராஜராஜ சோழனின் ஜாதி குறித்தும், அவரது ஆட்சி காலம் குறித்தும் கடுமையாக விமர்சித்த திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கும்பகோணம் அருகே மேடை போட்டு தன்னை ஜாதி வெறியன் என்று பிரகடனப்படுத்திய ரஞ்சித்தின் இன்னொரு முகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
 
அட்டகத்தி, மெட்ராஸ் என்ற படங்களின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறியப்பட்டவர் பா.ரஞ்சித் ரஜினியின் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியதால் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். அதன் பின்னர் ஒவ்வொரு மேடையிலும் ஜாதி ஒழிப்புக்காக குரல் கொடுப்பதாக கூறி அவ்வபோது ஆவேசமாக பேசி சர்ச்சையில் சிக்கி கொள்வது பா.ரஞ்சித்தின் வழக்கம்..!
அந்தவகையில் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் கடை வீதியில் நடந்த எழுத்தாளர் நீலப்புலிகள் அமைப்பின் நிறுவனர் உமர்பரூக்கின் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, தமிழ் மற்றும் தமிழர் கோசங்களுக்கு எதிராக பேசிய பா.ரஞ்சித் தன்னை ஒரு ஜாதி வெறியன் என்று பிரகடனப்படுத்திக் கொண்டார்.
 
கடவுளாக வணங்கப்படும் மாட்டை சாப்பிடுவதால் கடவுளையே சாப்பிடுபவன் என்றும் பெருமை தெரிவித்தார். ஒரு கட்டத்தில் மாமன்னர் ராஜராஜ சோழனின் ஜாதி குறித்து பேசிய பா.ரஞ்சித் அவரது ஆட்சிகாலத்தை இருண்டகாலம் என்று கடுமையாக விமர்சித்தார். அத்தோடு விடாமால் ராஜராஜசோழன் ஆட்சியில், 400 பெண்கள் விலைமாதர்களாக மாற்றப்பட்டதாகவும் சாடினார்.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் இந்த பேச்சு குறித்து உளவுப்பிரிவு காவலர் அளித்த புகாரின் பேரில் பா.ரஞ்சித் மீது இரு பிரிவுகளின் கீழ் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பாலா அளித்த புகாரின் பேரில் ரஞ்சித் மீது இரண்டாவதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 153, 153 ஏ ஆகிய சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருவதால் அவரை விசாரணைக்கு அழைக்க காவல்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

Comments