காஞ்சனா நாயகியின் அடுத்த ஹாரர்!

காஞ்சனா 3 படத்துக்குப் பின் வேதிகா நடிக்கும் அடுத்த ஹாரர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.பிரபல தெலுங்கு நடிகரான சாய் குமாரின் மகன் ஆடை சாய்குமார் அறிமுகமாகும் புதிய படம் ‘ஜங்கிள்’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிவருகிறது. ஆடை சாய்குமாருக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். இந்தாண்டு வெளியான காஞ்சனா 3 திரைப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்த மூன்று கதாநாயகிகள் வேதிகாவும் ஒருவர். நீண்ட இடைவெளிக்குப் பின், தமிழில் வேதிகா நடித்த அந்தப் படம் கலவையான விமர்சனங்களையும் கடந்து மாபெரும் வெற்றி பெற்றது.
 
இந்த நிலையில், வேதிகா நடிக்கும் அடுத்த ஹாரர் படமாக ஜங்கிள் உருவாகவிருக்கிறது. நேற்று (ஜூன் 29) வெளியான இதன் ஃபர்ஸ்ட் லுக் ஒரு ஹாரர் படத்துக்கான தன்மையுடன் கதையையும் விளக்கும் விதமாக அமைந்துள்ளது. காட்டுக்குள் பயணம் செய்யும் ஐந்து பேர் கொண்ட குழு, பெளர்ணமி இரவில் தூக்கிட்டு மரணித்த ஒரு பிணத்தைப் பார்ப்பது போல அமைந்துள்ளது இதன் ஃபர்ஸ்ட் லுக்.
ஆரா சினிமாஸ் - நியூ ஏஜ் சினிமாஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. கார்த்திக் - விக்னேஷ் இயக்குகின்றனர். ஜோஸ் ஃபராங்கிளின் இசையமைக்கின்றார்.
 
வேதிகா, தற்போது பிரபு தேவா தயாரிக்கும் வினோதன் என்ற தமிழ்ப் படத்திலும், ஹோம் மினிஸ்டர் என்ற கன்னடப் படத்திலும், தி பாடி என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார். இதில் ஒவ்வொரு திரைப்படமும் வெவ்வேறு தயாரிப்பு நிலையில் இருக்கின்றன.

Comments