சிம்பு, கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து ஹெலிகாப்டருடன் படப்பிடிப்பு!

சிம்பு, கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்க, நார்தன் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கடும் வெயில், காற்று, அடிக்கடி வரும் மழை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடந்து வருவதாக கதாநாயகர்களில் ஒருவரான கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் சில காட்சிகள் ஹெலிகாப்டரிலும் படமாக்கப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. 'பிகில்' படத்தில் விஜய் இருப்பது போன்ற வேட்டி, சட்டை, தாடி என சிம்பு தாதா கெட்டப்பில் இருக்கிறார். ஹெலிகாப்டரில் அவருடன் சிலர் அமர்ந்திருக்கிறார்கள். ஏதோ ஒரு மலைப் பகுதியில் அந்தக் காட்சி படமாகி உள்ளது. சிம்பு ரசிகர்கள் அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவச் செய்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டுத்தான் சிம்பு 'மாநாடு' படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். அடுத்த மாதம் அதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

Comments