ரசிகர்கள் ஹோம்லி'யாக பார்க்கவே விரும்புகின்றனர்! கவர்ச்சி, நமக்கு, 'செட்' ஆகாது: ஆத்மியா!

மனம் கொத்திப்பறவை படத்திற்கு பின், நடிப்புக்கு முழுக்கு போட்டு, படிக்கச் சென்ற மலையாள வரவான, ஆத்மியா, தற்போது, வெள்ளை யானை படம் மூலம், மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். அவருடன் பேசியதிலிருந்து:

மனம் கொத்திப்பறவைபடத்திற்கு பின் உங்களை காணவில்லையே?
அந்தப் படத்திற்கு பின், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன். எங்கள் வீட்டிலும், சினிமாவில் நடிக்க பெரிய ஆதரவு இல்லை. எங்கள்குடும்பத்தில் சினிமாவில் யாரும் இல்லாததால், எனக்கு ஆதரவு கொடுத்து, வழி நடத்த யாரும் இல்லை.

மீண்டும் நடிக்க வந்தது ஏன்?
பி.எஸ்சி., நர்ஸிங் படிப்பு முடிந்தது. படங்களில் நடிக்க ஆசை வந்தது. அமீபா என்ற மலையாள படத்தில் நடித்தேன். சினிமா தான் என் வாழ்க்கை எனதீர்மானித்தேன். அதனால், மீண்டும் வந்து விட்டேன்.
 
சிவகார்த்திகேயன் உடன் நடித்த உங்களுக்கு, சினிமா அறிமுகம் எப்படி இருந்தது?
நிறைய பேருக்கு என் பெயரே தெரியாது. ஆனால், வெளியே யார் பார்த்தாலும், என்னை சிவகார்த்திகேயனுடன் நடித்தவர் என்று தான், என்னை அடையாளம் கண்டனர்.

தமிழில் நடித்து வரும் படம்?
சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி உடன், வெள்ளை யானை படத்தில் நடித்து வருகிறேன்.

விஜய் சேதுபதி உடன் மலையாள படத்தில்நடிக்கிறீர்களா?
மார்க்கோனி மத்தாக்கி என்ற மலையாள படத்தில், ஜெய்ராம், விஜய் சேதுபதி ஆகியோருடன் நடிக்கிறேன். வங்கி ஒன்றில் துப்புரவு வேலை பார்ப்பவராக நடிக்கிறேன். விஜய் சேதுபதி முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி உடன் நடித்த அனுபவம்?
96 படத்திற்கு பின், கேரளாவில் விஜய் சேதுபதி ரசிகர்கள் நிறைய பேர் உருவாகி விட்டனர். அதில் நானும் ஒருத்தி. அவர் ரொம்ப எளிமையான மனிதர். நடிக்கும் போது நிறைய விஷயங்கள் கற்று தருவார்.

வெள்ளை யானை எந்தமாதிரியான படம்?
தஞ்சை விவசாயிகளின் வாழ்க்கையை கூறும் படம். அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துள்ளேன். கிராமத்து பெண்ணாக, எந்த, 'மேக்கப்'பும் இல்லாமல் நடித்துள்ளேன். படம் வெளியான பின், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஹோம்லி'யாக உள்ள உங்களுக்கு, கிளாமர்செட் ஆகுமா?
ரசிகர்கள், என்னை, 'ஹோம்லி'யாக பார்க்கவே விரும்புகின்றனர். கவர்ச்சி பிடிக்கும். அதிக கவர்ச்சி, நமக்கு, 'செட்' ஆகாது.

Comments