நடிகர் சங்க நிலம் விற்பனை புகார்: குற்றப்பிரிவு போலீசில் விஷால் ஆஜர்!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு காஞ்சீபுரம் மாவட்டம், வேங்கட மங்கலம் கிராமத்தில் 26 சென்ட் இடம் வாங்கப்பட்டது. இந்த இடத்தை முன்பு தலைவராக இருந்த சரத்குமாரும், பொதுச் செயலாளராக இருந்த ராதாரவியும் சங்கத்துக்கு தெரியாமல் விற்றதாக கூறப்படுகிறது.
 
இதுதொடர்பாக புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தபிறகு சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் இதுகுறித்து காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்தார். ஐகோர்ட்டு உத்தரவுப்படி காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரத்குமார், ராதாரவி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை நடிகர் சங்கத் தலைவர் நாசர் காஞ்சீபுரம் போலீசில் தாக்கல் செய்தார்.
 
இதைத்தொடர்ந்து நடிகர் விஷாலும் நேரில் ஆஜராகி விசாரணைக்கு தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசார் அவருக்கு கடந்த மாதம் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் விஷால் படப்பிடிப்பு இருப்பதால் வேறொரு நாளில் ஆஜராவதாக கடிதம் மூலம் தெரிவித்து இருந்தார்.
 
இந்த நிலையில் நடிகர் விஷால் இன்று மதியம் இந்த வழக்கு தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். அப்போது குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தென்னரசு அங்கு இல்லை. இதைத்தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் விஷால் நிலம் தொடர்பான ஆவணங்களை கொடுத்தார்.

Comments