நடிகர் சங்க தேர்தல் நிறுத்தம்: தேர்தல் நடத்தும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக எஸ்.வி.சேகர் கருத்து!

நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலை நிறுத்த சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.வாக்காளர் பட்டியலில் குளறுபடி என எழுந்த புகார் குறித்து பதிவாளர் ஏற்கனவே விளக்கம் கேட்டிருந்தார். மொத்தம் 61 உறுப்பினர்கள் நீக்கப்பட்டிருப்பதாக பதிவாளருக்கு புகார் வந்தது குறிப்பிடத்தக்கது.நடிகர் சங்க தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டதால், தேர்தலுக்கு பாதுகாப்பு கோரிய மனு மீது தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துவிட்டது. மேலும், பாதுகாப்பு கேட்டு விஷால் தொடர்ந்த மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப் படுவதாகவும் நீதிமன்றம் கூறிவிட்டது.               
இதனிடையே சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன், நடிகர் விஷால் சந்தித்தார். நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக நடைபெறும் இந்த சந்திப்பில் கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோரும் உடனிருந்தனர்.
 
நடிகர் சங்க தேர்தலுக்கு, மொத்த உறுப்பினர்கள் 3644, ஆயுட்கால உறுப்பினர்கள் 1328, தொழில்முறை உறுப்பினர்கள் 1840. மொத்தம் 3173 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இதனிடையே நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்துவிட்டதால் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது, எங்கள் அணியினருடன் ஆலோசித்து விட்டு கருத்து தெரிவிப்பேன் என்று நடிகர் பாக்யராஜ் தெரிவித்தார்.
சங்க கட்டட கட்டுமான பணிகளை பாண்டவர் அணியினர் முடிக்காததால் தான், நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம் என்று நடிகர் பாக்யராஜ் கூறினார்.
 
இதனிடையே, சென்னையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. சங்க தலைவராக இயக்குநர் பாரதிராஜா ஒருமனதாக தேர்வான நிலையில் தேர்தல் நடைபெற உள்ளது.முன்னதாக, எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில், நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதி பெற்ற ரசீதை விஷால் காட்ட வேண்டும், நாடகம் நடத்துவதற்கு நான் முறைப்படி அனுமதி பெற்றுள்ளேன் என்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் நடிகர் எஸ்.வி.சேகர் கூறியிருந்தார்.நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப் பட்டுள்ள நிலையில், பதவிக்காலம் முடிந்ததால், நடிகர் சங்க தேர்தலை நடத்த தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

Comments