கோடை விடுமுறையை மனதில் வைத்து ஜூன் மாத படங்கள் வசூலை அள்ளுமா?

பொதுவாக, கோடை விடுமுறையை மனதில் வைத்துத்தான் படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள். விடுமுறைக்காலம் என்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வருவார்கள், படம் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

இந்த நம்பிக்கை இந்த வருடம் பொய்த்துப் போய்விட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிஸ்டர் லோக்கல், என்.ஜி.கே. ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் தோல்விப் படங்களாகிவிட்டன. அதுமட்டுமல்ல, இந்த வருடம் கோடைவிடுமுறையில் பெரிய அளவில் படங்கள் வெளியாகவில்லை. ஆனால் விடுமுறை முடிவடைந்து பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதம் நிறைய படங்கள் வெளியாகின்றன.

ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில், அதாவது ரம்ஜான் பண்டியை முன்னிட்டு 5-ஆம் தேதி நிசார் ஷபி இயக்கத்தில் ரஹ்மான், ரெஜினா கெசெண்டரா நடித்த '7' படம் வெளியானது. 7 ஆம் தேதி விஜய் ஆண்ட்னி, அர்ஜுன் நடிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கிய 'கொலைகாரன்' படம் வெளியானது.

ஜுன்-14 அன்று, நயன்தாராவின் 'கொலையுதிர்காலம்', சிவகார்த்திகேயன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்சி கதையின் நாயகியாக நடித்துள்ள 'கேம் ஓவர்', 'தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்', 'போக்கிரிராஜா' ஆகிய படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரன், அதுல்யா ரவி நடித்துள்ள 'சுட்டுப் பிடிக்க உத்தரவு' என நான்கு படங்கள் வெளியாகின்றன.

ஜூன் 21-ஆம் தேதி அன்று அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிக்கும் 'சிந்துபாத்', தனுஷ் நடித்த தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆப் தி பகிர் என்ற ஆங்கில படத்தின் தமிழ் டப்பிங்கான 'பக்கிரி', ஜீவா நடிக்கும் 'கொரில்லா' ஹரீஷ் ராம் இயக்கியுள்ள தும்பா ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

ஜூன் 28-ஆம் தேதி ஜெயம் ரவி நடித்த 'கோமாளி', 'யோகி' பாபு நடித்துள்ள 'தர்மபிரபு', சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிக்கும் 'களவாணி-2', வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் எட்டு தோட்டாக்கள் படத்தில் கதாநாயகனாக நடித்த வெற்றி நடிக்கும் 'ஜீவி' ஆகிய படங்கள் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனை படங்கள் வெளியாகும் அதேநேரம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் சூடுபிடித்து வருகிறது. அதன் காரணமாக தியேட்டர்களில் வசூல் குறையும் என்ற கவலை தெரிவிக்கின்றனர் தியேட்டர் அதிபர்கள். அதைப் பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல் இந்த மாதம் படங்களை ரிலீஸ் செய்ய தயாராகிவிட்டனர் தயாரிப்பாளர்.

Comments