மோசடி.. திரை விமர்சனம்!

விஜூ தனது நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபடுகிறார். மனிதர்களின் பேராசையை தூண்டி அவர்களை ஏமாற்றும் விஜூ குறுகிய காலத்தில் 100 கோடி ரூபாய் பணத்தை சேர்ப்பதை லட்சியமாக கொண்டு இருக்கிறார். 100 கோடி ரூபாய் சேரும் நேரத்தில் போலீசில் நண்பர்களுடன் சிக்கிக் கொள்கிறார் விஜூ.
 
போலீஸ் விசாரணையில் விஜூவின் பிளாஷ்பேக் தொடங்குகிறது. பண மதிப்பிழக்கத்தின் போது ஆளூங்கட்சி அமைச்சருக்காக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை புது 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றும் பணியில் ஈடுபடுகிறார். அப்படி மாற்றப்படும் 100 கோடி பணத்தை விஜூ வசம் வைத்துக்கொள்ள சொல்கிறார் அமைச்சர். சிலகாலம் கழித்து வாங்கிக்கொள்வதாக கூறுகிறார்.
ஆனால் அந்த பணம் காணாமல் போகிறது. எனவே 30 நாட்களில் அந்த 100 கோடியை திருப்பி தரும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார். இவை எல்லாம் தெரிய வந்ததும் போலீஸ் என்ன செய்தது? விஜூவின் பணம் எப்படி காணாமல் போனது? என்பதே படத்தின் மீதிக்கதை.  விஜூவுக்கு மோசடிகள் செய்யும் கதாநாயகன் வேடம் பொருத்தமாக இருக்கிறது. முதல் பாதியில் நண்பர்களுடன் சேர்ந்து அவர் செய்யும் மோசடிகள் சுவாரசியமாக இருக்கின்றன.
 
மோசடி செய்வதற்காக பல கெட் – அப்புகள் போட்டு முடிந்த அளவுக்கு நடித்துள்ளார். நாயகி பல்லவி டோரா விஜூவின் மனைவியாக வருகிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் புது மனைவிக்கே உரிய வெட்கத்தையும் காதலையும் வெளிப்படுத்துகிறார். அமைச்சராக வரும் விஜயனும் அவரது தம்பியாக வருபவரும் வில்லத்தனமான நடிப்பில் கவனிக்க வைக்கிறார்கள்.
 
முதல் பாதி முழுக்க மோசடி காட்சிகளை மட்டுமே வைத்திருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன். இது ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், இரண்டாம் பாதியை உணர்வுபூர்வமாக மாற்றி இருக்கிறார். பணமதிப்பிழக்கத்தின் போது எப்படி எல்லாம் பணத்தை மாற்றினார்கள் என்று காட்டியது ஆச்சர்யப்பட வைக்கிறது. ஆர்.மணிகண்டனின் ஒளிப்பதிவும் ஷாஜகானின் இசையும் படத்தை ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது.

Comments