தற்போதைய காலகட்டத்தில் நடிகர் தேர்தல் தேவையற்றது என பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று, பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர் கார்த்தி சேலம் நாடக நடிகர் சங்கத்தினரை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபெறவுள்ள நடிகர் சங்க தேர்தலுக்கு குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் செலவாகும். அந்த பணத்தை வைத்து நடிகர் சங்க கட்டிடத்தில் மீதமுள்ள பணிகளை முடிக்கலாம். ஆகவே தற்போது உள்ள காலகட்டத்தில் இந்த தேர்தல் தேவையற்றது என தெரிவித்தார்.
மேலும், பாண்டவர் அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றும், மூன்றரை ஆண்டுகள் நாங்கள் செய்த பணியின் அடிப்படையில் நாங்கள் கட்டாயம் வெற்றி பெறுவோம் என நம்புவதாகவும் கூறினார். நடிகர் ராதாரவி பேசுவதிலேயே நாங்கள் ஜெயித்துவிடுவோம். அவர் எங்களை எதிர்த்து பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு வாக்குகளாக மாறி எங்கள் அணியை வெற்றி பெறச்செய்யும், அதனால் அவர் எங்களைப் பற்றி நிறைய பேசட்டும் என்றார்
நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ், இதுபோன்று எதிரணியில் நிற்பார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என கூறிய கார்த்தி,
யார் ஜெயித்தாலும் இந்த நடிகர் சங்க கட்டிடம் என்பது முழுமை பெறும். நடிகர் சங்கம் என்பது எப்போதும், ஓர் தனி நபரின் கட்டுப்பாட்டில் இயங்காது என கூறினார்.
மேலும் சங்கரதாஸ் அணி வெற்றி பெற்றால் உங்களுக்கு முதல் மரியாதை கொடுப்போம் என கூறியிருப்பது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, அவர்களின் மரியாதை எங்களுக்கு தேவை இல்லை என்றும் நாங்கள் கையில் எடுத்த இந்த பணியை முழுமையாக செயல்படுத்தினாலே எங்களுக்கு மனநிறைவு கிடைக்கும் என்றும் கார்த்தி தெரிவித்தார்.
Comments
Post a Comment