ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திடீரென சூர்யாவுக்கு ஜோடியான பூஜா ஹெக்டே!

சூர்யா தற்போது சூரரைப் போற்று என்கிற படத்தில் நடித்து வருகிறார். இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கி வருகிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சத்தீஸ்கரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்து வருகிறார். இரண்டாம், மூன்றாம் கட்ட நடிகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடித்து வந்த அபர்ணா, திடீரென சூர்யாவுக்கு ஜோடியாக அறிவிக்கப்பட்டதில் பலருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம் எழுந்தது உண்மை.

ஆனால் கதைக்கு தேவை என்பதால் அவர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்தநிலையில் படத்தில் இன்னொரு முக்கிய கதாநாயகி இருப்பதாகவும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு பின்னரே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதால் இன்னும் அந்த கதாநாயகி யார் என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அந்த கேரக்டரில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார் என ஒரு செய்தி கசிந்துள்ளது. அந்தவகையில் மிஷ்கினின் முகமூடி படத்தில் தமிழில் அறிமுகமான பூஜா ஹெக்டே கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா படம் மூலம் தமிழுக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தெலுங்கில் வெளியான மகரிஷி படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக பூஜா ஹெக்டே உயர்ந்துள்ளதால், தமிழில் இனி அவருக்கான டிமாண்ட் அதிகரிக்கலாம் என்றும் இதன் மூலம் தெரிகிறது.

Comments