தலயை வைத்து த்ரில்லர் படம் - போனி கபூர், நான் வில்லன் இல்லை - எஸ்.ஜே.சூர்யா -தல 60 அப்டேட்ஸ்!

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குநர் ஹச். வினோத் தற்போது போனி கபூர் தயாரிப்பில் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை இயக்கி வருகிறார். இந்தப் படம் இந்தியில் அபிதாப் பச்சன் நடித்த நேர்கொண்ட பார்வையின் ரீமேக் ஆகும். வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கும் தல 59 படமான இதனை அடுத்து தல 60-படத்தையும் ஹச்.வினோத் இயக்க போனி கபூரே தயாரிக்கிறார்.

சமீபத்தில் டி.என்.ஏவுக்கு பேட்டி அளித்த போனிகபூர்,’’ நேர்கொண்ட பார்வை படத்தின் போதுதான் அஜித்தைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ள முடிந்தது. அவர் விளையாட்டு மற்றும் பைக் ரேஸிங்கில் இவ்வளவு ஆர்வமாக இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. எதேச்சையாக எங்களது அடுத்த படம் (தல 60) வேகத்தை மையமாக வைத்து வரும் ஒரு த்ரில்லர் படமாகும். அந்தக் கதைக்கு அவரது இந்த ரேசிங் திறமை நிச்சயம் பயன்படும். எனக்கு அஜித்தை வைத்து ஹிந்தியில் ஒரு ஆக்‌ஷன் திரைப்படம் செய்யவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார்.

அஜித் F2, F3 மற்றும் பல கார் ரேஸ்களில் கலந்துகொண்டுள்ளார். 2010-ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட விபத்தால் அதன்பிறகு ரேஸ்களில் பங்குபெறவில்லை. இந்நிலையில் தல 60 படத்தில் அஜித்துக்கு வில்லனாக அவரை வைத்து வாலி படத்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக செய்திகள் வெளியானது. இதனைத் தற்போது எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார்.

Comments