தமிழக பாடபுத்தகத்தில் இடம் பெற்ற 3ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவன் - காரணம்?

ஈரோடு மாவட்டத்தின் கனிராவூத்தர்குளம் சிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாட்ஷா-அப்ரூஸ் பேகம் தம்பதி. இவர்களின் இளைய மகன் முகமது யாசின். இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்களுடன் முகமது விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பள்ளிக்கு அருகே இருந்த சாலையில் பை ஒன்று கிடந்துள்ளது.
 
இதனை சிறுவன் திறந்துபார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. உடனடியாக அந்த பையை வகுப்பு ஆசிரியையிடம் கொடுத்தார். ஆசிரியை பையை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். சிறுவனின் நேர்மையைக் கண்டு வியந்தார். பின்னர் ஆசிரியை, முகமதையும் அவருடன் அழைத்துச் சென்று தலைமை ஆசிரியரிடம் நடந்ததை சொல்லவே, மூவரும் ஈரோடு எஸ்பி சக்திகணேசனை காணச் சென்றனர். முகமதின் செயலைச் சொல்லி அந்த பையை எஸ்பியிடம் அவனையே கொடுக்கச் செய்தனர்.   
பின்னர் சக்தி கணேசன் அந்த சிறுவனுக்கு பரிசளித்தார். இந்த செய்தி பத்திரிக்கைகளில் பரவலானது. நடிகர் ரஜினிகாந்த் இந்த செய்தி அறிந்து அந்த சிறுவனை குடும்பத்துடன் போயஸ் கார்டன் அழைத்து முகமதுக்கு தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டினார்.இந்நிலையில் இந்த ஆண்டுக்கான 2ம் வகுப்பு பாடபுத்தகத்தில் ஆத்திச்சூடியில் 'நேர்பட ஒழுகு' என்ற வாக்கியத்திற்கு சான்றாக முகமது செய்த செயல் அவனது புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. இது அந்த சிறுவனின் நேர்மைக்கு கிடைத்த பரிசு என்றுதான் சொல்ல வேண்டும்.    

Comments