நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்ததால் நடிகர் பார்த்திபனுக்கு ரூ. 25 ஆயிரம் நஷ்டம்!

நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்ததால் நடிகர் பார்த்திபனுக்கு ரூ. 25 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர். நடிகர் சங்க தேர்தல் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தான் நடப்பதாக இருந்தது. அங்கு தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்தது. இதற்கிடையே நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இதனால் தேர்தல் நடக்குமா, நடக்காதா என்று தெரியாமல் இருந்தது.
இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இன்று காலையிலேயே வாக்களித்துவிட்டார். வாக்களித்த பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவரிடம் தேர்தலில் வாக்களிக்க பலருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதே என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, சவுண்டு மிக்சிங்கிற்காக நான் இன்று காலை மும்பை செல்வதாக இருந்தது. எனக்கும், என் உதவியாளருக்கும் விமான டிக்கெட் போட்டாச்சு. தேர்தல் ரத்து என்றார்கள். அதனால் மும்பை போகலாம் என்று இருந்தோம். அதன் பிறகு தேர்தல் ரத்து இல்லை என்றார்கள். இதனால் மும்பை போக முடியவில்லை. இந்த காரணத்தால் எனக்கு கிட்டத்தட்ட ரூ. 25 ஆயிரம் நஷ்டம் என்றார்.
சட்டசபை தேர்தலில் ஒரு பூத்தில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர் வரை வாக்களிப்பார்கள். ஆனால் நடிகர் சங்க தேர்தலில் ஒரே பூத்தில் 3 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில் எதிர்காலத்தில் வாக்குப்பதிவை இரண்டு அல்லது மூன்று பூத்துகளில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் பார்த்திபனிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர், ஒரே இடத்தில் 3 ஆயிரம் பேர் வாக்களிப்பது கஷ்டமான விஷயம் தான். கட்டடம் கட்டுவதற்கு முன்பாக பூத்தையாவது விரிவுபடுத்துவோம் என்றார்.

Comments