ரஜினியின் ஓப்பனிங் பாடல் தர்பாரில் தொடரும் பேட்ட' செண்டிமெண்ட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே அதில் முக்கியமாக இடம்பெற்றிருப்பது அசத்தலான ஓப்பனிங் பாடல். அதிலும் இந்த ஒப்பனிங் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடுவது செண்டிமெண்ட்டான ஒன்றாக இருந்து வந்தது. இந்த ஃபார்முலா ரஜினியின் பல படங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' மற்றும் 'காலா' படங்களில் மட்டும் பயன்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படத்தில் ரஜினிக்கு ஒரு அட்டகாசமான பாடலை வைத்த இயக்குனர், அதில் எஸ்பிபியையும் பாட வைத்தார். இந்த செண்டிமெண்ட் தற்போது தர்பார் படத்திலும் தொடரவுள்ளது. ஆம், 'தர்பார்' படத்தில் இடம்பெறும் ரஜினியின் ஓப்பனிங் பாடலை எஸ்பிபி பாடவுள்ளாராம். அனிருத் இசையில் எஸ்பிபியின் பாடலை கேட்க ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
 
மும்பையில் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் மும்பையில் வரும் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments