செல்வராகவன் டைரக்சனில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ஜிகே’ படம் வரும் மே-31ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்தப்படம் துவங்கியதில் இருந்து ரிலீஸ் வரையிலான தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் சூர்யா.என்.ஜி.கே திரைப்படம் என்பது இரண்டரை வருடப் பயணம். எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான படம். 2000-ம் ஆண்டிலே செல்வராகவனோடு பணிபுரிய விரும்பினேன். ஆனால் சுமார் 18 ஆண்டுகள் கழித்து அது நடந்துள்ளது.
செல்வராகவன் முதலில் 3 ஐடியாக்களோடு வந்தார். ட்ரீம் வாரியர் நிறுவனத்தோடு அமர்ந்து பேசும்போது, இந்தப் படம் பண்ணினால் சரியாக இருக்கும் என நினைத்தோம். ஆனால், செல்வராகவன் பேசும் போது ‘நந்த கோபாலன் குமரன்’ பற்றி பேச்சு அடிக்கடி இருந்தது. அவர் அந்த கதாபாத்திரத்துடன் அவ்வளவு ஒன்றிப் போய் இருந்தார். ஆகையால் ‘என்.ஜி.கே’ தொடங்கினோம்.
இப்படம் என் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்று சொல்லலாம். இதன் படப்பிடிப்பில் நிறைய கற்றுக் கொண்டேன் என்று சொல்லலாம். தினமும் புது புதிதாக பிரமிக்க வைத்துக் கொண்டே இருந்தார் செல்வராகவன். ஒரு காட்சிக்கு எப்படியெல்லாம் நடிக்க வேண்டும் என்று நினைப்போமோ, அதை இயக்குநர் செல்வராகவன் வித்தியாசப்படுத்திக் கொண்டே இருந்தார்.
ஒரு உதாரணம் சொல்றேன். கிராமத்தில் நான் என்ன ஆனேன் என்று தெரியாமல் காத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சின்ன சஸ்பென்ஸ் இருக்கும். அதைத் தாண்டி ஒரு முழு இரவு கடக்கும். அடுத்த நாள் காலை வரும் போது, எப்படி நடிக்க வேண்டும் என்று 20 ஆண்டுகால திரையுலக அனுபவத்தில் எனக்கு தெரியும். ஆனால் செல்வராகவன் உடல்மொழி மூலமாக கிராமத்தினரை ஆச்சர்யப்படுத்த நடித்துக் காட்டினார். அது நான் நினைத்ததை விட 7 மடங்கு அதிகப்படியாக இருந்தது. இந்த மாதிரி தினமும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருந்தார். அந்த மாதிரியான நடிப்பு என் திரையுலக வாழ்க்கையில் நடித்ததே இல்லை.
மற்ற இயக்குநர்கள் படத்தின் காட்சியைப் பார்த்து, இது செல்வராகவன் சார் படம் மாதிரி இருக்கிறது என்று சொல்லவே முடியாது. ஏனென்றால் அவரால் மட்டுமே அம்மாதிரியான படங்கள், காட்சிகள் பண்ண முடியும். என் திரையுலக வாழ்வில் செல்வராகவன் படம் பண்ண வேண்டும் என எண்ணினேன். என்ன படம், என்ன கதை, என்ன கேரக்டர் என பண்ணினாலும் அதில் வித்தியாசத்தைக் கொண்டு வருபவர் செல்வராகவன்.
இப்படத்தில் அரசியல் பின்னணி இருக்கும். மிடில் கிளாஸ் பையன் ஒருவன் அரசியலுக்குள் வர வேண்டும் என எண்ணினால், அவனைச் சுற்றி என்ன நடக்கும் என்பது தான் கதை. தான் நினைத்தை அடைய என்ன செய்கிறான் என்பது தான் படம். இதனால் அவனது குடும்பத்துக்கு என்னவாகிறது என்று சொல்லியிருப்பார். வித்தியாசமான செல்வராகவன் படமாக இருக்கும். யுவன், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், அனல் அரசு மாஸ்டர், உதவி இயக்குநர்கள் என அனைவருக்கும் நன்றி.
எப்போதுமே கதையைப் படித்துவிட்டு வராதீர்கள் என்று செல்வராகவன் கூறுவார். எதுவுமே தயாரிப்பின்றி வாருங்கள் என்பார். எப்படி நடிக்க வேண்டும் என்பதை, வெட்கமே இல்லாமல் நடித்துக் காட்டுவார் செல்வராகவன். என்னங்க இப்படி நடிக்கிறீங்கள் என்பேன். அவர் ஒரு அற்புதமான நடிகர். அவரை மாதிரி நடிப்பதே எனக்கு சவாலாக இருந்தது.
படப்பிடிப்பு சமயத்தில் நிறைய பேசினோம். 3 வயதில் அவருக்கு கண் பிரச்சினை வந்தது. 10-ம் வகுப்பு வரை அவருடன் படித்தவர்கள் அவரை எப்படி பார்த்தார்கள், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றைத் தாண்டி இந்த நிலைக்கு வந்துள்ளார். பலருக்கும் செல்வராகவனுடைய வாழ்க்கை என்பது உத்வேகம் அளிக்கக் கூடியது. உண்மையில் அவரை மாதிரி இருப்பதே ஒரு சவால் தான்.
வாக்களிப்பது படத்துக்கு முன்பாகவே முடிந்து விட்டது என நினைக்கிறேன். கண்டிப்பாக இப்படம் மக்களை சிந்திக்க வைக்கும். நம்மைச் சுற்றி என நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லியிருக்கார். 2000-ம் ஆண்டில் ஒரு படத்தில் அரசியல் எப்படி இருக்கிறது என்று சொல்லியிருப்பார். அதையே இப்போது தமிழ்நாட்டில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பதிவு செய்துள்ளார் என நினைக்கிறேன். மற்ற படங்களில் இல்லாத விஷயங்களை இப்படத்தில் காணலாம்.எனக்கு நிறைய படங்கள், நிறைய அன்பைக் கொடுத்துள்ளன. நிறைய பேருக்கு ‘அயன்’, ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’ பிடித்திருந்தது. ஆனால், எனக்கு தனிப்பட்ட முறையில் ‘காக்க காக்க’ அன்புச்செல்வனாக நடிக்க ஆசை.
ரசிகர்களின் ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி. நான் என்ன தான் செடியாக இருந்தாலும், மரமாகி கிளை எல்லாம் விட்டிருக்கேன் என்றால் அந்த வேருக்கு தண்ணீர் விட்டது நீங்கள் மட்டுமே. என்னை இந்தளவுக்கு கொண்டு வந்ததிற்கு நன்றி. 20 வருடங்களை கடந்துவிட்டேன். உங்களுடைய தொடர் அன்பு மட்டுமே என்னால் புதுமையைத் தேடி ஒட வைக்கிறது.
கார்த்தியுடன் ஜோ நடிக்கும் முதல் ப்ரேமை இன்று தான் அனுப்பிவைத்தார்கள். ஊட்டியில் ஷுட்டிங் போய் கொண்டிருக்கிறது. அது ரொம்பவே ஸ்பெஷலான படம். நான் அவருடன் மீண்டும் இணைந்து நடிக்க கொஞ்ச நாளாகும். இன்றைக்கு ஒரு கதை கேட்டேன். முதல் பாதி மட்டுமே கேட்டேன். விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன். நானும் ஜோவும் இணைந்து நடிப்பது ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும் என நினைக்கிறேன். அதற்காகவே இவ்வளவு நேரம் எடுக்கிறது. எனக்கு அவருடன் இணைந்து நடிக்க வேண்டும்.
Comments
Post a Comment