’ஒத்தச் செருப்பு’ படம் தொடர்பான படுபயங்கர ரகசியத்தை ரஜினியை வைத்து உடைத்த பார்த்திபன்!

இன்று ஆடியோ ட்ரெயிலர் வெளியிடும் வரை தனது ‘ஒத்தச் செருப்பு’ படம் தொடர்பான ரகசியத்தை வெளியிடாமல் பாதுகாத்து வந்த நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் அந்த ரகசியத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார்.

பார்த்திபன் கதை, திரைக்கதை எழுதித் தயாரித்து நடித்துள்ள, அதாவது படம் முழுக்க அவர் ஒருவர் மட்டுமே நடித்துள்ள படம் ‘ஒத்தச் செருப்பு.இதற்கு முன் 1960 களில் சுனில் தத் ஒரு படத்தை எடுத்தார். அவர் மட்டுமே படத்தில் இருந்தார், வேறு யாருமே கிடையாது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. 

இது குறித்து ரஜினி சற்றுமுன்னர் பார்த்திபனை வாழ்த்தி வெளியிட்டுள்ள வீடியோவில், “என் அருமை நண்பர் பார்த்திபன் ஒரு படைப்பாளி. வித்தியாசமான படைப்பாளி. நல்ல மனிதர். புதிது புதிதாக சிந்திக்ககூடியவர். நல்ல நல்ல படங்களை கொடுத்துள்ளார். அவர் திடீரென்று படம் எடுப்பதை நிறுத்திவிட்டு நடிப்பிற்கு வந்தவுடன் எனக்கு சின்ன வருத்தம் இருந்தது. ஒரு நல்ல படைப்பாளி படம் எடுக்காமல் நடிக்க வந்து விட்டாரே என்று வருத்தம் இருந்தது
 
சமீபத்தில் அவரை சந்தித்தேன். அப்போது நீங்கள் படம் பண்ணனும்னு நான் சொன்னபோது ‘ஒத்தசெருப்பு’ படத்தை பண்ணிட்டு இருக்கேன் என என்னிடம் கூறினார். இது ஒரு வித்தியாசமான முயற்சி. தனி ஒருத்தர் ஒரு படம் முழுவதும் வருவது என்பது வித்தியாசமானது. 
இத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்த்திபன் தென் இந்தியாவில் முதன்முறையாக இந்தப் படத்தை எடுக்கிறார். அது மட்டுமல்லாமல் பார்த்திபனே கதை எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்து உள்ளார். இது உலகத்திலேயே முதன்முறை. இந்த முயற்சிக்கு அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். 
 
ஒரு சின்ன படம் வெற்றி அடைய எனக்கு தெரிஞ்சி நான்கு விஷயங்கள் இருக்கணும். முதலில் அந்தப் படத்தின் கரு வித்தியாசமாக இருக்க வேண்டும். இதுவரை சொல்லாத கதையாக இருக்க வேண்டும். தகவல் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். சிந்திக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். அடுத்து அந்தப் படம் மினிமம் பட்ஜெட்டில் எடுத்திருக்க வேண்டும். மூன்றாவதாக சினிமாட்டிக்காக இல்லாமல் ரியலிஸ்டிக்காக எடுத்திருக்க வேண்டும். நான்காவது நல்ல பப்ளிசிட்டி பண்ணனும். இது செய்தாலே அந்தப் படம் நல்லா போகும். இது நான்கும் ‘ஒத்தசெருப்பு’ படத்தில் இருக்கு. 
 
நல்ல கதை. படமும் நல்லா எடுத்திருப்பாங்க. பப்ளிசிட்டி சொல்லவே தேவையில்லை. நண்பர் கமல், பாக்யராஜ், இயக்குநர் ஷங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி வெற்றியடைவது போலவே இந்தப் படமும் நல்ல வெற்றி பெற வேண்டும் எனவும் ஆஸ்கருக்கு தேர்வாக வேண்டும் என் மனதார பார்த்திபனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். 

Comments