ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்–நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது சிவகார்த்திகேயன் கூறியதாவது: நடுத்தர குடும்பத்தை சேர்ந்த குறும்புத்தனமான இளைஞனுக்கும் ஒரு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருக்கும் பெண்ணுக்கும் இடையிலான மோதலும் காதலும்தான் மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை. மது அருந்தும் காட்சி, பெண்களை கேலி செய்யும் வரிகள் உள்ள பாடல்கள் படத்தில் இல்லை.
இந்த படம் ரஜினிகாந்தின் மன்னன் படத்தின் ரீமேக் என்று பேசுகிறார்கள். மன்னன் ரீமேக் இல்லை. ஆனாலும் அந்த படத்தில் இருந்த நாயகன், நாயகி மோதல் மிஸ்டர் லோக்கல் படத்தில் இருக்கும். இது முழுக்க நகைச்சுவை படம். நயன்தாரா என்னை விட சிறந்த நடிகை. வேலைக்காரன் படத்தில் அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்ற மனக்குறை இந்த படத்தில் தீர்ந்தது. அவர் நடிப்புக்கு தீனிபோட்டுள்ள படம்.
யோகிபாபு, ரோபோ சங்கர், சதீஷ் ஆகியோர் நகைச்சுவை காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளனர். தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன். ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த கதை, மித்ரன் இயக்கும் படம், பாண்டிராஜ் இயக்கும் கிராமம் சார்ந்த படம் ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறேன்.
எல்லோருக்கும் பிடிக்கும் பொழுதுபோக்கு கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். குழந்தைகளை பயமுறுத்தும் சைக்கோ த்ரில்லர் படங்களில் நடிக்க மாட்டேன்.’’ இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.
Comments
Post a Comment