ரஜினி சிறுத்தை சிவா திடீர் சந்திப்பு: சிவாவுடன் இணைகிறாரா ரஜினி.?

'விஸ்வாசம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இயக்குனர் சிவா அடுத்து சூர்யா நடிக்க உள்ள 39வது படத்தை இயக்க உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் நடிக்க சூர்யா சம்மதம் தெரிவித்ததையும் திரையுலகத்தில் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

சூர்யா தற்போது சுதா கோங்கரா இயக்கத்தில் 'சூரரைப் போற்று' படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்புடன் சிவா படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாகும் என முன்னர் தகவல் வெளியாகின. இப்போது சிவா, சூர்யா படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவது தள்ளிப் போக வாய்ப்புள்ளது என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

சூர்யா, சிவா இணையும் 39வது படத்தின் சில விஷயங்களைப் பற்றிய பேச்சு வார்த்தை தயாரிப்பு தரப்பில் இன்னும் நடந்து வருகிறதாம். அது முடிந்து சரியான பிறகுதான் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள். அதனால் தான் சிவா உடனடியாக சிலரைப் பிடித்து ரஜினியை சந்திக்கும் வாய்ப்பை நேற்று ஏற்படுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கிறார்கள்.

இதற்கு முன்பும் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க வேண்டிய சமயத்தில் தான் அவர் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தை இயக்கப் போனார். அதன்பின் பா.ரஞ்சித், சூர்யா இன்னும் இணையவேயில்லை. அது போலவே இப்போது சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க அறிவிப்பு வெளியான பிறகு அவர் ரஜினியைச் சந்தித்துள்ளார். அதனால், இப்போது 'தர்பார்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த்தை, சிவா இயக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்...

பேட்ட படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் இயக்குநர் சிவா சந்தித்துள்ளார்.  அவரிடம் கதை கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 இவர்களது சந்திப்பு சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக நடந்துள்ளது. எனவே ரஜினி - சிவா கூட்டணி விரைவில் இணைய வாய்ப்புள்ளது என்கிறார்கள். முன்னதாக ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் சந்திப்பு நிகழ்ந்தது. தர்பார் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என்றும் கூறுகிறார்கள். சிவா விஸ்வாசம் படத்தை அடுத்து சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.

ரஜினி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. எனவே சிவாவின் கூட்டணியிலும் ரஜினி நடிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறாகள் சிலர்.

Comments