நாங்க மிலிட்டரி ஃபேமிலி :தமிழ் சினிமாவுக்கு கிடைத்த புதுவரவு: அஞ்சலி நாயர்!

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த புதுவரவு நடிகைகளில் ஒருவர் அஞ்சலி நாயர். சமீபத்தில் வெளிவந்த நெடுநல்வாடை’ படத்தின் மூலம் நடிக்கத் தெரிந்த நடிகை ஒருவர் கிடைத்திருக்கிறார் என்கிற பாராட்டை பெற்றுள்ளார். நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் பின்னணி பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் பாடுவதற்கும் தயாராக இருக்கிறார்.
அதனால்தானோ என்னவோ படப்பிடிப்பில் கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் மலையாள மெலடிப் பாடல்களை பாடி  படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பாராம். புத்தகம் வாசிப்பது, சமையல் செய்வது, மாடலிங் இதெல்லாம் தான் எனக்கு பிடித்த விஷயம். இப்போது இந்த வரிசையில் நடிப்பையும் இசையையும் சேர்த்துக்கொண்டேன்’’ என்றவரிடம் தொடர்ந்து பேசினோம்.

முதல் படத்திலேயே பாப்புலாரிட்டி கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?

வித்தியாசமான கதை உள்ள படத்தினை தேர்ந்தெடுத்ததுதான் அதற்கு காரணம். இயக்குநர் செல்வகண்ணன் ‘நெடுநல்வாடை’ கதையை சொல்லும்போதே இது தான் தமிழில் அறிமுகமாவதற்கு சரியான படம் என்று மனதுக்கு தோன்றியது. என்னைப் பொறுத்தவரை ஒரு கதையில் ஏதோ ஒரு இடம் எக்ஸைட்டிங்கா இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்தக் கதை நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. முகம் தெரியாத நண்பர்கள் பலர் பாராட்டி டுவிட் போட்டிருக்கிறார்கள். மீடியா சப்போர்ட் எனக்குள் மிகப் புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

தமிழ் சினிமா அனுபவம் எப்படி இருந்தது?

வித்தியாசமாக இருந்தது. நான் சிட்டியில் பிறந்து வளர்ந்த பொண்ணு. பாவாடை தாவணியெல்லாம் அணிந்தது இல்லை. அப்படி பாரம்பரிய உடையை அணிந்து நடித்ததே பரவசமாக இருந்தது.இயக்குநர் செல்வகண்ணன் உடன் பிறவா சகோதரி மாதிரி என் மீது அக்கறை காண்பித்தார். நான் சினிமாவுக்கு புதியவள் என்றாலும் எனக்கான முழு சுதந்தி ரத்தை கொடுத்தார். மிகவும் பொறுமையாக காட்சிகளை சொல்லிக் கொடுத்தார். எனக்கு தமிழே தகராறு எனும் போது நெல்லை வட்டார மொழியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. நெல்லை மக்கள் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்கள். அங்கேயே இரண்டு மூன்று மாதம் தங்கியதால் அவர்கள் குடும்பத்தில் ஒருவராகதான் என்னை பார்த்தார்கள்.

அந்தப் படத்தில் எனக்கான சவால்கள் நிறையவே இருந்தது. எனக்கு கொஞ்சம் ஈகோ ஜாஸ்தி. முடியாது, தெரியாது என்பது என்னுடைய அகராதியில் இல்லை. ஒரு காட்சியில் குடத்தை இடுப்பில் சுமந்து வரவேண்டும். அசல் கிராமத்து பெண் போல் இருக்க வேண்டும் என்பது இயக்குநரின் எதிர்பார்ப்பு. அந்தக் காட்சிக்கு வெறும் ஐந்து நிமிடத்தில் தயாராகி கேமராமுன்பு நின்றேன். பூ ராமு, ஐந்து கோவிலான், இயக்குநர் செல்வ கண்ணன் உட்பட படக்குழுவினர் பேருதவியாக இருந்தனர்.

தமிழ் சினிமாவில் மலையாள ஹீரோயின்கள் நடிப்பது பற்றி?

பிளாக் அண்ட் ஒயிட் காலத்திலிருந்தே இது இருந்திருக்கிறது. தமிழிலிருந்து மலையாளத்துக்கும், மலையாளத்திலிருந்து தமிழுக்கும் நாயகிகள் இடம் மாறி நடித்திருக்கிறார்கள். இப்போது சோஷியல் மீடியாக்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் எல்லாமே வெட்டவெளிச்சமாகிவிடுகிறது. மலையாளத்திலிருந்து வந்த நயன்தாரா மேடம் ‘ஐயா’வில் ஆரம்பித்து ‘ஐரா’ வரை கலக்கிட்டிருக்காங்க. பொதுவா தென்னிந்திய பெண்களிடம் திராவிட சாயல் இருப்பதால் மலையாளத்திலிருந்து நிறையப் பேர் வருகிறார்கள். அதுமட்டுமில்ல, நல்ல ஆர்வமும், திறமையும் உள்ள நடிகைகள் எந்த மொழியிலும் ஜொலிக்க முடியும்.

உங்க வயது, சம்பளம் எவ்ளோன்னு சொல்லுங்களேன்?

என்னுடைய வாழ்க்கை திறந்த புத்தகம் மாதிரி. எதையும் ஒளித்து வைக்கும் பழக்கம் எனக்கில்லை. கல்லூரி படிக்கும்போதே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. டிகிரி முடித்ததும் வேலை கிடைத்தது. இப்போ எனக்கு வயசு 21. சம்பளம் விவகாரம் அப்பாவுக்கு தான் தெரியும். அவர்தான் சம்பள விஷயங்களை கையாளுகிறார்.

எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமா இருக்கீங்க?

முதல்லே எனக்கு கதை பிடிக்கணும். அதுல என் நடிப்புக்கு முக்கியத்துவம் இருந்தா போதும். மற்றபடி சிறப்பு சலுகைகளை எதிர்பார்க்கமாட்டேன். தமிழில் மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள் ரொம்பவே பிடிக்கும். அதனால அவங்க நடிக்க கூப்பிட்டா முதல்ல ஓ.கே சொல்லிடுவேன். அப்புறம்தான் கதையைக் கேட்பேன்.

நீங்கள் ஏர் ஹோஸ்டஸாக பணிபுரிவதால் தொடர்ந்து நடிப்பீர்களா?

ஏர் ஹோஸ்டஸாக சமீபத்தில் தான் ஜாயின் பண்ணினேன். படப்பிடிப்புக்கு இடைவெளியில்தான் வேலைக்கு போனேன். வேலைக்கு சென்ற கொஞ்ச நாளிலேயே உலகம் முழுவதும் சுற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. விமானி பணிப் பெண் வேலை எனக்கு பிடித்திருந்தாலும் அந்த வேலை தற்காலிகமானதுதான். அஞ்சலி நாயரை நடிகையாகத்தான் பிறர் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் சினிமாவை என்னுடைய புரொபஷனாக பார்க்கிறேன்.

பிடித்த நடிகர்?


விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ்னு இப்போ கோலிவுட்டை கலக்கிட்டு இருக்கிற எல்லோரையும் பிடிக்கும். நடிகைகளில் தமன்னா, ஸ்ருதிஹாசனை பிடிக்கும். ‘3’ படத்துக்கு பிறகு ஸ்ருதி Close to my heart என்னும் அளவுக்கு டச் பண்ணிவிட்டார்.

ரோல்மாடல்?

ஜோதிகா மேடம். ‘வாலி’ தொடங்கி சமீபத்தில் வெளிவந்த ‘காற்றின் மொழி’ வரை ஒவ்வொரு படத்திலும் வெரைட்டி காண்பித்து பின்னியெடுக்கிறாங்க. திருமணத்துக்கு முன்பு வரை நம்பர் ஒன் ஸ்தானத்தில் இருந்தாங்க. இப்போதும் தன்னுடைய இமேஜுக்கு ஏற்ற கேரக்டரை தேர்வு செய்து பின்னியெடுக்கிறாங்க. Hats of to JO Madam.

மலையாளத்திலும் கவனம் செலுத்துவீங்களா?


என்னுடைய கேரியர் ஆரம்பித்தது மலையாளத்தில் தான். ஆனால் அங்கே சிறிய கேரக்டர்தான் பண்ணியிருப்பேன். தமிழில்தான் முதன் முதலாக நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது மலையாளத்தில் நாயகியாக நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

அரசியலில் ஆர்வம் இருக்கா?

தப்பான ஆள்கிட்ட கேட்டு இருக்கீங்க. தேர்தல் அரசியலில் இறங்கிதான் மக்களுக்கு சேவை செய்யணும் என்ற அவசியம் இல்லை. எங்கள் டோட்டல் ஃபேமிலியே ஆர்மி. அப்பா பிரபாகர் மிலிட்டரியில் இருக்கிறார். அக்கா அஸ்வினி நேவி டாக்டர். இன்னும் பல உறவின் முறைகள் ஆர்மியில் இருக்கிறார்கள். அந்த வகையில் நாங்களும் தேசத்துக்காக சேவை செய்து வருகிறோம்.

பொழுதுபோக்கு?

என் குடும்பத்தோட இருப்பதுதான் என்னுடைய பொழுதுப் போக்கு. ஆனால் அப்பா டில்லியில் இருக்கிறார். அம்மா கேரளாவில் இருக்கிறார். அக்கா மும்பையில் இருக்கிறார். நான் தேசம் விட்டு தேசம் பறந்து கொண்டிருக்கிறேன். சின்ன வயதிலிருந்தே எனக்கு பாடுவது பிடிக்கும். ஸ்கூல் நிகழ்ச்சிகளில் பாடல் போட்டிகளில் பரிசு வாங்கியிருக்கிறேன். சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் பாடுவதற்கு தயாராக இருக்கிறேன். அதுக்காகவே குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட்டு குரல் வளத்தை காத்துவருகிறேன். தவிர, புத்தகம் வாசிப்பது, குக்கிங், பெயின்டிங் என்று சில பொழுதுபோக்கு இருக்கிறது.

Comments